தேசிய தகுதி காண் மருத்துவ நுழைவுத் தேர்வு பிரச்னையில், தமிழகம் உள்ளிட்ட மாநில அரசுகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில், அவசரச் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்று சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தேசிய தகுதிகாண் மருத்துவ நுழைவுத் தேர்வு கட்டாய உத்தரவை உச்ச நீதிமன்றம் மறு ஆய்வு செய்ய வலியுறுத்தி, சென்னை கீழ்ப்பாக்கத்தில் மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் ôயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற சங்கத்தின் பொதுச் செயலர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் கூறியதாவது:
எம்.பி.பி.எஸ். படிப்புக்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்து 2007-ஆம் ஆண்டில் தமிழக அரசு சட்டம் இயற்றியது. இதற்கு குடியரசுத் தலைவரின் அனுமதியும் அளிக்கப்பட்டு, சட்ட ரீதியான பாதுகாப்பு உள்ளது. 2007-08-ஆம் கல்வியாண்டு முதல் தமிழகத்தில் பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில்தான் எம்.பி.பி.எஸ். சேர்க்கை நடைபெறுகிறது. இது தமிழக அரசின் உரிமைகளுக்கு உகந்த நடவடிக்கையாகும்.
அதிர்ச்சி அளிக்கும் உத்தரவு: எனினும், இந்த ஆண்டே தேர்வு நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நுழைவுத் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விதிவிலக்கு வழங்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையையும் உச்ச நீதிமன்றம் இதுவரை ஏற்கவில்லை. இந்த நடவடிக்கை, தமிழக மாணவர்களுக்கு மிகப் பெரிய பாதிப்பை உருவாக்கும். ஆலோசனைகள்: மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு மாநில அரசுகள் மட்டும்தான் மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும்.
இதுதவிர, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள எம்.பி.பி.எஸ். இடங்கள், தனியார் கல்லூரிகள்-பல்கலைக்கழகங்களின் கட்டுப்பாட்டில் உள்ள எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு பொதுவாக ஒரே நுழைவுத் தேர்வை மத்திய அரசு நடத்த வேண்டும். மேலும் தனியார் மருத்துவக் கல்லூரிகள், தனியார் பல்கலைக்கழகங்களின் எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கை நன்கொடையைத் தடுக்க ஒற்றைச் சாளர கலந்தாய்வு முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்த வேண்டும். இவ்வாறு செய்தால், மாணவர்களுக்கு நன்மை கிடைக்கும்.
சமூக நீதிக்கு எதிரானது: மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு, தேசிய தகுதி காண் நுழைவுத் தேர்வை மத்திய அரசு அறிமுகப்படுத்துவது மாநில அரசுகளின் உரிமைகள், கூட்டாட்சி கோட்பாடு, சமூக நீதி, இடஒதுக்கீடு உரிமைகள் ஆகியவற்றுக்கு எதிரானது.
எனவே நுழைவுத் தேர்வை தமிழக மாணவர்களுக்குப் புகுத்தாமல், மாநில அரசின் உரிமைகளைப் பாதுகாக்க அவசரச் சட்டம் உள்ளிட்ட போர்க்கால நடவடிக்கைகளை மத்திய அரசு உடனடியாக எடுக்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.