Pages

Thursday, April 21, 2016

வாக்குச்சாவடி மையஅலுவலர்கள், பணியாளர்கள் பணியிடம் கணினி மூலம் தேர்வு

கணினி மூலம் வாக்குச்சாவடி மைய அலுவலர்கள், பணியாளர்கள் பணியிடம் தேர்வு செய்யும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இப்பணியை மாவட்ட தேர்தல் அலுவலர் டி.பி. ராஜேஷ் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியது:


கணினி மூலம் குழுக்கள் முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ள வாக்குச்சாவடி மைய அலுவலர்களுக்கு வாக்குப்பதிவு தொடர்பான பணிகள் குறித்தும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கையாள்வது குறித்தும் பயிற்சி வழங்கப்படுகிறது.


கரூர் சட்டப்பேரவைத் தொகுதி வாக்குச்சாவடி மைய அலுவலர்களுக்கு கரூர் பசுபதீஸ்வரா நகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியிலும், அரவக்குறிச்சி தொகுதி வாக்குச்சாவடி மைய அலுவலர்களுக்கு ஆறுமுகம் அகாதெமி மேல்நிலைப் பள்ளியிலும், குளித்தலை தொகுதி வாக்குச்சாவடி மைய அலுவலர்களுக்கு குளித்தலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், கிருஷ்ணராயபுரம் (தனி) தொகுதி வாக்குச்சாவடி மைய அலுவலர்களுக்கு புலியூர் ராணி மெய்யம்மை மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும் பயிற்சி நடைபெறுகிறது.

அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட 4,916 வாக்குச்சாவடி மைய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு வரும் 24-ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சட்டப்பேரவைத் தொகுதி வாரியான மையங்களில் பயிற்சி நடைபெறுகிறது.

இதில், தேர்வு செய்யப்பட்ட அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கட்டாயம் பங்கேற்று பயிற்சி பெற்றுக்கொள்ள வேண்டும். குறிப்பாக, வாக்குச்சாவடி மையத்தில் பணியாற்றும் தலைமை அலுவலர், முதல் நிலை, 2-ம் நிலை, 3-ம் நிலை மற்றும் 4-ம் நிலை அலுவலர்களுக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது.

இப்பயிற்சி தொடர்ந்து 3 கட்டங்களில் வழங்கப்படும். ஒவ்வொரு பயிற்சியிலும் வாக்குப்பதிவு மையங்களில் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தவறாமல் பங்கேற்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் கையாளுதல் மற்றும் வாக்குப்பதிவின்போது மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து நன்கு தெரிந்துகொண்டு வாக்குப்பதிவு நாளன்று சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில், மாவட்ட உதவித் தேர்தல் அலுவலர் மு. அருணா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) உமா மகேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.