Pages

Thursday, April 21, 2016

இன்று முதல் மே 20ம் தேதி வரை மாநகராட்சியில் விடுப்பு கிடையாது

'தேர்தலை முன்னிட்டு, இன்று முதல் தேர்தல் பணிகள் முடியும் வரை, மாநகராட்சியின் எந்த ஒரு பணியாளருக்கும், எந்த காரணத்தை முன்னிட்டும் விடுப்பு கிடையாது. மீறி விடுப்பு எடுப்போர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்று மாநகராட்சி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.


தேர்தல் பணி
சட்டசபை தேர்தல் பணியில், அரசு ஊழியர்கள் படுபிசியாக உள்ளனர். சென்னை மாவட்டத்தை பொறுத்தவரை, மாவட்ட நிர்வாகத்தின் கீழ் போதிய பணியாளர்கள் இல்லாததால், சென்னை மாநகராட்சி நிர்வாகமே, எல்லா வகையான தேர்தல்களையும் நடத்துகிறது. மாநகராட்சி கமிஷனர், மாவட்ட தேர்தல் அலுவலராக உள்ளார்.


சென்னை மாநகராட்சியில் பணிபுரியும், 26 ஆயிரம் ஊழியர்களில், 70 சதவீதம் பேருக்கு தேர்தல் பணி வழங்கப்படுகிறது. ஆனால், கோடை விடுமுறை, வெயில் தாக்கம் உட்பட பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டி ஊழியர்கள் விடுப்பு அதிகமாக எடுப்பதால், தேர்தல் பணிகள் பாதிக்கும் சூழல் உருவாகி உள்ளது.வரும், 22ம் தேதி வேட்பு மனு தாக்கல் துவங்க உள்ளதாலும், அதன் பிறகு தேர்தல் பணிகள் சூடுபிடிக்கும் என்பதாலும், ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் பணியில் இருக்க வேண்டும் என்று மாநகராட்சி கருதுகிறது. அதனால், இன்று முதல் தேர்தல் பணிகள் முடியும் வரை, சென்னை மாநகராட்சியின் பணியாளர்கள், எந்த காரணத்தை முன்னிட்டும் விடுப்பு எடுக்கக் கூடாது என்றும், மீறி விடுப்பு எடுப்போர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநகராட்சி எச்சரித்துள்ளது.

அனுமதி தேவை

இதுகுறித்து உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: மாநகராட்சி ஊழியர்களுக்கு மே, 20ம் தேதி வரை விடுப்பு கிடையாது. தேர்தல் பணி செய்வோர் மட்டுமின்றி, எல்லா பணியாளர்களுக்கும் இது பொருந்தும். துறை தலைவர்களுக்கு இதுகுறித்து உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. உடல்நிலை பாதிப்பு, உறவினர் இறப்பு நிகழ்வுகளுக்கு உரிய அனுமதியுடன் செல்ல வேண்டும். அவசியமில்லாமலும், உரிய முன் அனுமதி பெறாமலும் விடுப்பு எடுத்தால் தேர்தல் பணி செய்ய மறுத்ததாக ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.