சில மாணவர்களுக்கு கணிதம் என்றாலே ஒரு வித பயம்; வேறு சில மாணவர்களுக்கு கணிதப் பாடத்தின் மீது அதீத ஆர்வம். ஒரே வகுப்பில் இந்த இரண்டு நிலை மாணவர்களையும் மிகச் சாதாரணமாக பார்க்க முடியும். உண்மையில் கணிதம், வாழ்க்கையில் யாராலும் தவிர்க்கமுடியாத ஒரு அற்புதமான துறை!
கணிதத்தை பார்க்கும் விதத்திலேயே அது கடினமானதாகவும், மிக எளிதானதாகவும் தெரிகிறது. பிற துறைகளைவிட கணிதம் எளிது. பயத்தை விடுத்து தொடர் பயிற்சி பெறுவதால் மிக எளிதாக கணிதத்தை கற்றுக்கொள்ள முடியும். பொறியியல், தொழில்நுட்பம், பௌதீக அறிவியல், புள்ளியியல், கணிப்பொறி, வணிகம், பொருளாதாரம், நிதி மற்றும் வாழ்க்கை அறிவியல் உள்ளிட்ட பல துறைகளில் கணிதப் பயன்பாடு மிக அவசியம்.
பொதுவாக, தூய கணிதம் மற்றும் துணைநிலை கணிதம் என்று இரண்டு பிரிவுகளாக கணிதம் பிரிக்கப்படுகிறது. தூய கணிதம் என்பது, கணிதத்தின் கோட்பாடுகள், கருத்துக்கள் ஆகியவற்றை, அதன் நடைமுறை பயன்பாட்டைப் பின்பற்றுவது. துணைநிலை கணிதம் என்பது, பிற துறைகளில் உள்ள சிக்கல்களை கணிதத்தை கொண்டு தீர்ப்பதாகும். இயற்பியல், வேதியியல், உயிரியல், வணிகம், தொழில்துறை மற்றும் ஆராய்ச்சி உள்ளிட்ட பல துறைகளில் கணிதம் பயன்படுத்தப்படுகிறது.
பணியின் தன்மை
துணைநிலை கணித நிபுணர், பல துறைகளை சேர்ந்தவர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். பலவித சிக்கல்களை அடையாளம் காண வேண்டும். அவரின் அணுகுமுறையானது, நெகிழ்வுத்தன்மை உடையதாகவும், தர்க்கரீதியாகவும் இருக்க வேண்டும். அவரிடம் கொடுக்கப்பட்ட பிரச்சினையின் பௌதீக பரிமாணங்களையும், நுட்பங்களையும் புரிந்துகொள்வதோடு, அதை தீர்ப்பதிலும் உண்மையான ஆர்வம் இருக்க வேண்டும்.
கணிதத்தின் ஒரு பிரிவான ‘அல்ஜீப்ரா’வில், எழுத்துக்களும், குறியீடுகளும் கொள்ளளவைக் குறிக்கும். ‘ஜியோமெட்ரி’யில், வரிசை சாய்வுகள், மேற்பரப்புகள், திடப்பொருட்கள் ஆகியவற்றின் அளவுகள் மற்றும் தொடர்புகளை ஆராய்கின்றன. ‘ட்ரிக்னோமெட்ரி’ என்பது, ஒரு முக்கோணத்தின் சாய்வுகள் மற்றும் புறங்களுக்கு இடையேயான தொடர்புகளை ஆராய்கிறது. கணிதம் என்பது ஒரு தனிப்பட்ட பாடமாக பார்க்கப்பட்டாலும், அது, அனைத்து துறைகளிலும், ஏன்? நமது அன்றாட வாழ்விலும், நேரடியாகவோ, மறைமுகமாகவோ நிச்சயம் பயன்பட்டுக்கொண்டே தான் இருக்கிறது!
வாய்ப்புகள் ஏராளம்
ஒருவர் கணித ஆராய்ச்சியாளராக இருக்க விரும்பினால், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் வேலைவாய்ப்புகள் பல இருக்கின்றன. ஒருவர் கணித ஆசிரியராக இருக்க விரும்பினாலும், பல பொறியியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழங்களில் நல்ல சம்பளத்திற்கு வேலைவாய்ப்புகள் உள்ளன.
மேலும், கணிதத்தை, சிக்கல் தீர்ப்பதற்கான அம்சமாக பயன்படுத்த விரும்புபவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக, ஏராளமான வாய்ப்புகள் உருவாகி வருகின்றன. பல்வேறு நிதி சேவை நிறுவனங்கள், டேட்டா சயின்ஸ், பன்னாட்டு நிறுவனங்களின் ஆராய்ச்சி கூடங்கள் போன்றவை இந்திய கணித நிபுணர்களை அதிகளவில் வேலைக்கு அமர்த்துகின்றன. அவர்களுக்கு, ஐ.டி., துறை பணியாளர்களை விட அதிக சம்பளம் வழங்கப்படுகிறது!
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.