நாட்டில் கல்வித் தரம் குறைந்து வருவதைத் தடுக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார். ராஞ்சியில் உள்ள பிர்லா தொழில்நுட்பக் கல்வி நிலையத்தின் 26-ஆவது பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரணாப் முகர்ஜி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிப் பேசியதாவது:
நாட்டில் கல்வித்தரம் குறைந்து வருவது கவலையளிக்கிறது. இதனைத் தடுக்க கல்வியாளர்களும், அரசியல் தலைவர்களும் முன்முயற்சி எடுக்க வேண்டும். கல்வித் தரத்தை மேம்படுத்த பல்வேறு நிலைகளில் நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. முக்கியமாக தொடக்கக் கல்வி முதல் உயர் கல்வி வரை தரமான ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும்.
வெளிநாட்டுக் கல்வி நிலையங்களுடன் ஒப்பந்தங்களை மேற்கொள்வதும் அவசியம். மேலும், நமது நாட்டில் உள்ள உயர் கல்வி நிறுவனங்கள் தங்களுக்குள் அதிக அளவில் தகவல் பரிமாற்றத்தை வைத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் அறிவுப் பகிர்வு விசாலமடையும். சிறப்பான கருத்துப் பரிமாற்றம் மாணவர்களின் அறிவை வேகமாக வளர்க்கும்.
நமது நாட்டில் உயர் கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை வேகமாக வளர்ந்து வருகிறது. உயர் கல்வி நிறுவனங்கள் மாணவர்களைத் தொழில் முனைவோர்களாக வளர்த்தெடுப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். நமது இளைஞர்கள் வேலை தேடுபவர்களாக இல்லாமல் பலருக்கு வேலை அளிப்பவர்களாக இருப்பதுதான் தேசத்துக்குப் பெருமை என்று பிரணாப் முகர்ஜி பேசினார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.