Pages

Wednesday, January 13, 2016

மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி: முதுநிலை ஆசிரியர்களை விடுவிக்க வலியுறுத்தல்

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியிலிருந்து முதுநிலை ஆசிரியர்களை விடுவிக்க வேண்டும் என, தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தியது. இக்கழகத்தின் நாமக்கல் மாவட்டத் தலைவர் ஆ.ராமு, மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தியிடம் செவ்வாய்க்கிழமை அளித்த மனு விவரம்:   நாமக்கல் மாவட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் முதுநிலை ஆசிரியர்களுக்கு மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஏற்பட்ட பிழைகளை திருத்தம் செய்தல், மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஆதார் எண்ணை இணைத்தல் போன்ற பணிகளுக்காக பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது.

பிளஸ் 2 பொதுத் தேர்வு நெருங்கி வரும் நிலையில் மாணவர்களை முழு தேர்ச்சியடைய வைப்பதற்காக பல்வேறு பயிற்சியளிப்பதிலும், சிறப்பு வகுப்பு எடுப்பதிலும், பொதுத்தேர்வு செய்முறைத் தேர்வுக்காக மாணவர்களைத் தயார் செய்வதிலும் ஆசிரியர்கள் முழுமையாக மும்முரமாக இம் மாதம் செயல்படுவர்.

 இந்த நிலையில், மக்கள் தொகை கணக்கெடுப்பு சரிபார்ப்பு, ஆதார் எண் இணைப்பு பணியில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவதால் பொதுத் தேர்வு எழுதும் செய்முறைத் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களின் நலனில் தொய்வு ஏற்பட வாய்ப்புள்ளது.   எனவே, பொதுத் தேர்வு,  செய்முறைத் தேர்வுக்கு மாணவர்களைத் தயார்படுத்தும் வகையில், மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியிலிருந்து   முதுநிலை ஆசிரியர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்.

 2008-ஆம் ஆண்டில் தரம் உயர்த்தப்பட்ட தண்ணீர்பந்தல்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி கடந்த 3 ஆண்டுகளாக பொதுத் தேர்வில் 100 சத தேர்ச்சி பள்ளியாக திகழ்கிறது.

 இப் பள்ளியில் அறிவியல் ஆய்வகம் இல்லாததால் அங்கு பிளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவியர் கடந்த 6 ஆண்டுகளாக தேவனாங்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு மிதிவண்டிகளில் சென்று பொதுத் தேர்வு செய்முறை தேர்வுகளை செய்து வருகின்றனர்.

 மாணவர்களின் சிரமத்தை தவிர்க்க நிகழ் கல்வி ஆண்டில் அப் பள்ளியிலே பொதுத்தேர்வு, செய்முறைத் தேர்வுகளை செய்ய வழிவகை செய்ய வேண்டும். இதற்காக, பள்ளி வளாகத்தில் நவீன அறிவியல் ஆய்வகங்களுடன் கூடிய கட்டடங்களை கட்டித் தர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.