Pages

Thursday, January 14, 2016

முழுமையான தொடக்கக் கல்வி அளிக்கும் முதல் மாநிலம் கேரளம்: ஹமீது அன்சாரி

அனைவருக்கும் தொடக்கக் கல்வியை முழுமையாக அளிக்கும் முதல் மாநிலமாக கேரள மாநிலம் உருவாகியுள்ளது என்று குடியரசுத் துணைத் தலைவர் ஹமீது அன்சாரி புதன்கிழமை அறிவித்தார். "இது ஒரு வரலாற்றுச் சாதனை' என்றும் அவர் கூறினார். கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் அவர் மேலும், பேசியதாவது: கேரள அரசின் தொடர் கல்வித் திட்டம், கல்வியாளர்களின் நன்கு திட்டமிடப்பட்ட முழு எழுத்தறிவுப் பிரசாரம் ஆகியவற்றின் பலனாக, கல்வித் துறையில் மற்றுமொரு சாதனையை இந்த மாநிலம் படைத்துள்ளது.
இந்த மாநிலத்தில் 5-ஆம் வகுப்பு வரை அனைவருக்கும் தொடக்கக் கல்வியை உறுதிசெய்வதற்காக கொண்டுவரப்பட்ட "அதுல்யம்' திட்டம் முழு வெற்றியடைந்துள்ளது. கேரள அரசியல் தலைவர்கள் மற்றும் அரசு நிர்வாகத்தின் அர்ப்பணிப்புடன் கூடிய பங்களிப்பு, கல்வியின் முக்கியத்துவத்தை அறிந்த இந்த மாநில மக்கள் ஆகியோரின் முயற்சியால் இந்தச் சாதனையை எட்ட முடிந்துள்ளது. இந்த மாநிலம் கல்விக்கு முக்கியத்துவம் அளித்ததன் காரணமாக, பல்வேறு துறைகளில் வெற்றிபெற முடிந்தது. ஸ்ரீநாராயண குரு போன்ற சமூக சீர்திருத்தவாதிகள், முஸ்லிம் கல்விச் சங்கம், நாயர் சங்கம், கிறிஸ்தவ சங்கம் போன்ற சங்கங்களும் கல்வியை சமூக இயக்கமாக பரவச் செய்வதற்கு உதவி புரிந்துள்ளன என்றார் ஹமீது அன்சாரி. சிவகிரி மடத்தில் அன்சாரி: இதனிடையே, கேரள மாநிலம், வர்கலாவில் அமைந்துள்ள சிவகிரி மடத்துக்கு அன்சாரி சென்றார். சிவகிரி மடம் என்பது, "ஒரே ஜாதி, ஒரே மதம், ஒரே கடவுள்' என்ற இலக்குடன், ஸ்ரீ நாராயண குருவால் தொடங்கப்பட்ட மடமாகும். மடத்தின் வளாகத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் அன்சாரி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.