Pages

Tuesday, January 19, 2016

அரசு அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதல் வசதிகள்

அரசு அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதல் வசதிகளை செய்து கொடுப்பதற்கான செயல்திட்டத்தை உருவாக்க 10 நாள்களுக்குள் கூட்டத்தை கூட்ட வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுதொடர்பாக ராஜீவ் ராஜன், ஞான சம்பந்தம் ஆகியோர் தனித்தனியே தாக்கல் மனுக்களில், " அரசுப் பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் எளிதாக ஏறுவதற்கு வசதியை ஏற்படுத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கென ஒருங்கிணைந்த விதிகளை உருவாக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்' என கோரியிருந்தனர். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.கே.கெளல், நீதிபதி புஷ்பா சத்ய நாராயணா ஆகியோர் பிறப்பித்த இடைக்கால உத்தரவு: மாற்றுத்திறனாளிகளுக்கு செய்து தர வேண்டிய கூடுதல் வசதிகள் குறித்த தகவல்கள் அடங்கிய கையேட்டை மத்திய பொதுப்பணித் துறை வெளியிட்டுள்ளது.
இதில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தமிழக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையர் தலைமையில் 10 நாள்களுக்குள் கூட்டத்தை கூட்ட வேண்டும். இதில், மத்திய, மாநில பொதுப்பணித் துறை அதிகாரிகள், நீதிமன்றத்துக்கு உதவுவதற்காக ஏற்கெனவே நியமிக்கப்பட்ட வழக்குரைஞர் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் அரசு அலுவலகக் கட்டடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதல் வசதிகள் செய்து கொடுப்பது குறித்து செயல் திட்டம் உருவாகும் என்றார். இந்த வழக்கு விசாரணையை மார்ச் 11-க்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றும் அப்போது தமிழக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையர் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.