Pages

Thursday, January 14, 2016

மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது சம்பள கமிஷன் சிபாரிசுகளை செயல்படுத்த குழு: மத்திய மந்திரிசபை ஒப்புதல்

மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது சம்பள கமிஷன் சிபாரிசுகளை செயல்படுத்த அதிகாரம் அளிக்கப்பட்ட செயலர்கள் குழுவை அமைக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது சம்பள கமிஷன் பரிந்துரைகளை நீதிபதி ஏ.கே.மாத்தூர் தலைமையிலான 4 உறுப்பினர்கள் குழு, கடந்த நவம்பர் மாதம் 19-ந் தேதி நிதி மந்திரி அருண் ஜெட்லியிடம் வழங்கியது.


இந்த பரிந்துரைகளை அரசு ஏற்றுக்கொள்கிற பட்சத்தில், கடந்த 1-ந் தேதி முதல் அமலுக்கு வரும். இதன்காரணமாக மத்திய அரசின் கஜானாவுக்கு கூடுதலாக ரூ.1 லட்சத்து 2 ஆயிரம் கோடி செலவு பிடிக்கும்.

7-வது சம்பள கமிஷன் சிபாரிசுகளை செயல்படுத்துவதற்காக அதிகாரம் அளிக்கப்பட்ட செயலர்கள் மட்டத்திலான குழுவை மத்திய அரசு அமைக்க உள்ளது. இதற்கான ஒப்புதலை பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று கூடிய மத்திய மந்திரிசபை வழங்கியது.

இந்த தகவலை பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி வெங்கையா நாயுடு நிருபர்களிடம் தெரிவித்தார்.

இந்த குழு மத்திய மந்திரி சபை செயலாளர் பிரதீப் குமார் சின்ஹா தலைமையில் செயல்படும். மேலும், சுகாதாரத்துறையில் ஒத்துழைப்பு அளிப்பதற்காக மாலத்தீவுகளுடன் 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. அத்துடன், சர்வதேச எரிசக்தி முகமையின் உறுப்பு நாடாக இந்தியா பொறுப்பேற்பதற்கும் மத்திய மந்திரிசபை தனது அனுமதியை வழங்கியது. 

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.