Pages

Monday, December 14, 2015

பிளஸ் 2 பொதுத்தேர்வு எப்போது? மாணவர்கள் குழப்பம்

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு தேதியை அறிவிக்காததால், தேர்வு தாமதமாகுமோ என, மாணவர்கள் குழப்பம் அடைந்துஉள்ளனர்.


பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும், மார்ச்சில் பொதுத் தேர்வு நடக்கும். ஆனால், நடப்பு கல்வி ஆண்டில்,ஏப்ரலில் சட்டசபைக்கு தேர்தல் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதால், பிப்ரவரியில் இருந்து தேர்தல் சார்ந்த பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபட வேண்டியுள்ளது. எனவே, பொதுத் தேர்வை விரைவில் முடிக்க வேண்டும்.
இதற்காக, வினாத்தாள்களும் இறுதி செய்யப்பட்டு, விடைத்தாள் அச்சடிப்பு ஆயத்த பணி துவங்கியுள்ளது. முதற்கட்டமாக, பிப்., 29ல், பிளஸ் 2 தேர்வை துவங்க, தேர்வுத்துறை திட்டமிட்டிருந்தது.ஆனால், மழை வெள்ளத்தால் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டு, வகுப்புகள் நடக்காமல், பாடங்கள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில், பிப்ரவரியில் தேர்வு வைப்பதா, அல்லது மார்ச், முதல் வாரத்துக்கு பின் துவங்குவதா என, தேர்வுத்துறையினர் ஆலோசித்து வருகின்றனர்.இதற்காக, பிப்., 29, மார்ச், 2 மற்றும் மார்ச், 7 ஆகிய தேதிகளில், ஏதாவது, ஒரு நாளில், பிளஸ் 2 தேர்வை துவங்கலாம் என திட்டமிட்டுள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன. பள்ளிகள் நாளை திறந்ததும், பொதுத் தேர்வு அறிவிப்பு வெளியாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.இதற்கிடையே, வழக்கமாக, டிசம்பர், முதல் வாரமே பொதுத் தேர்வு அறிவிக்கப்படும் நிலையில், இந்த ஆண்டு இன்னும் அறிவிப்பு வராததால், தேர்வு எப்போது என, மாணவர்கள் குழப்பம் அடைந்து உள்ளனர்.

தமிழகத்தில் பெய்த மழையால், மாணவர்கள் தங்கள் பாட குறிப்புகளையும், புத்தகங்களையும் இழந்து விட்டனர். எனவே, அரையாண்டு தேர்வை ரத்து செய்து விட்டு, மாணவர்கள் பொதுத் தேர்வுக்கு முழுமையாக தயாராக, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வெள்ளத்தில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர் குடும்பத்தினர் பலர், உடைமைகளை இழந்துள்ளனர். எனவே, அவர்களுக்கு, ஒரு மாத ஊதியத்தை, வட்டியில்லா முன் பணமாக வழங்க வேண்டும்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.