Pages

Friday, December 18, 2015

எஸ்.சி., எஸ்.டி. மாணவர்கள் உதவித்தொகை ரூ.1,549 கோடி நிலுவை: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவ-மாணவர்கள் உயர்கல்வி பயில வழங்கப்படும் மத்திய அரசின் உதவித் தொகைத் திட்டத்தின் கீழ், தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிலுவையான ரூ.1,549 கோடியே 76 லட்சத்தை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.  இதுகுறித்து, முதல்வர் ஜெயலலிதா வியாழக்கிழமை எழுதியுள்ள கடிதத்தின் விவரம்:


தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவ-மாணவிகள் மெட்ரிக் தேர்வுக்குப் பின்னர் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் உயர்கல்வியை பயில மத்திய அரசால் செயல்படுத்தப்படும் கல்வி உதவித்தொகைத் திட்டத்தை தமிழகம் செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின்கீழ் அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் 100 சதவீதம் மத்திய உதவி வழங்கப்படுகிறது.

இந்தத் திட்டத்துக்காக 2015-16-ஆம் ஆண்டில் தமிழக அரசு மொத்தம் ரூ.1, 295 கோடியே 55 லட்சம் செலவிட வேண்டியிருந்தது. இதில், மத்திய அரசின் பங்கு ரூ.942 கோடியாகும். 

 இதுதவிர, 2014-15-ஆம் ஆண்டில் மத்திய அரசு வழங்கியிருக்க வேண்டிய ரூ.1,175 கோடியே 10 லட்சம் நிலுவையில் இருக்கிறது. 2015-16-ஆம் ஆண்டில் இதுவரை மத்திய அரசு வெறும் ரூ.567 கோடியே 34 லட்சம் மட்டுமே வழங்கியுள்ளது. எனவே, தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய மொத்த நிலுவைத் தொகை ரூ.1,549 கோடியே 76 லட்சமாகும்.

 தமிழக அரசு தெரிவித்துள்ள கோரிக்கையை மத்திய சமூக நீதி, அதிகாரம் அளித்தல் அமைச்சகம் ஒப்புக் கொண்டிருக்கிறது. ஆனால், நிதிநிலை அறிக்கையில் போதிய தொகை ஒதுக்கீடு செய்யப்படாததால், இந்த நிதியை வழங்க இயலவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 நலிவடைந்த பிரிவினர் கல்வியின் மூலமாக வாழ்க்கையில் முன்னேற்றமடைய இந்தத் திட்டம் மிகவும் முக்கியமானதாகும். மாணவர்களில் பெரும்பாலானோர் மிகவும் ஏழ்மையான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு ஊக்கமளித்து, உயர்கல்வியைத் தொடர வழி செய்ய வேண்டுமானால், குறித்த காலத்தில் கல்வி உதவித்தொகையை வழங்க வேண்டும். இதை தாமதப்படுத்தினால், திட்டத்தின் நல்ல நோக்கமே அடிபட்டுப் போய்விடும்.

 இதன் முக்கியத்துவம், இன்றியமையாத் தன்மையைக் கருத்தில் கொண்டு சமூக நீதி, அதிகாரம் அளித்தல் துறைக்கு தமிழகத்துக்கு நிலுவையில் உள்ள ரூ.1,549 கோடியே 76 லட்சத்தை போதிய நிதியை ஒதுக்கீடு செய்ய மத்திய நிதியமைச்சகத்துக்கு பிரதமர் உத்தரவிட வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.