Pages

Sunday, November 22, 2015

7ஆவது ஊதியக் குழு பரிந்துரைகள்:காங்கிரஸ் அதிருப்தி

அண்மையில் வெளியிடப்பட்ட 7ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் குறித்து காங்கிரஸ் கட்சி அதிருப்தி தெரிவித்துள்ளது. பல்வேறு துறைகளில் பணியாற்றி வரும் அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்சமாக 40 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்றும் அக்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் அஜய் மாக்கன், தில்லியில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:


ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளால் மத்திய அரசு ஊழியர்கள் அதிருப்தியும், விரக்தியும் அடைந்துள்ளனர். அந்தப் பரிந்துரைகளால், ஊழியர்களுக்கு அநியாயமும், அவமதிப்பும் ஏற்பட்டுள்ளது.

5ஆவது மற்றும் 6ஆவது ஊதியக் குழுக்கள் 40 சதவீத ஊதிய உயர்வுகளை அறிவித்தன. ஆனால், 7ஆவது ஊதியக் குழுவில் 14.29 சதவீத ஊதிய உயர்வுக்கு மட்டுமே பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மேலும், மத்திய அரசு ஊழியர்களுக்கு இடையில் ஒன்றுக்கு 12 என்ற விகிதத்தில் இருந்த ஊதிய வேறுபாட்டை, ஒன்றுக்கு 8 என்ற விகிதமாகக் குறைக்க வேண்டும் என்று 6ஆவது ஊதியக் குழு பரிந்துரைத்திருந்தது. ஆனால், அந்த இடைவெளியை ஒன்றுக்கு 14 என்ற விகிதத்தில் 7ஆவது ஊதியக் குழு அதிகரித்துள்ளது.

குறைந்த ஊதியம் வாங்கும் ஊழியர்களுக்கு எதிராகவும், மேல்நிலை அதிகாரிகளுக்கு ஆதரவாகவும் இந்தப் பரிந்துரை உள்ளது.

இதனால், ஊழியர்களின் வாழ்க்கைத் தரம் மேம்படாது.

தற்போது வழங்கப்பட்டு வரும் 52 படிகளை நிறுத்தி வைத்தல், பண்டிகைக் காலங்களில் வட்டியில்லா முன்பணம் வழங்கப்படும் முறையை ஒழித்தல் உள்பட ஆட்சேபணைக்குரிய பல்வேறு அம்சங்கள் ஊதியக் குழுவின் பரிந்துரைகளில் காணப்படுகின்றன.

ஆண்டுதோறும் 3 முதல் 4 சதவீதம் வரை ஊதிய உயர்வு அளிக்கப்பட வேண்டும் என்று ஆறாவது குழு பரிந்துரை செய்திருந்தது. அது தற்போது 3 சதவீதமாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றார் அஜய் மாக்கன்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.