Pages

Friday, November 27, 2015

அண்ணா பல்கலை. பேராசிரியர்கள் நேரடி நியமனத்தை ரத்து செய்யக் கோரி வழக்கு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள் நேரடியாக நியமனம் செய்வதை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதிலளிக்க, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் திருநெல்வேலி மண்டல மையத்தில் உதவிப் பேராசிரியர்களாகப் பணியாற்றும் எஸ். ராஜகுமார், கே. கருப்புசாமி, கே. ரமேஷ் ஆகியோர் தாக்கல் செய்த மனு விவரம்: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 178 இணைப் பேராசிரியர்கள், 102 பேராசிரியர்களை நியமனம் செய்வதற்கு, நவம்பர் 8 ஆம் தேதி பல்கலைக்கழகப் பதிவாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

இத்தகைய பணியிடங்களை நியமனம் செய்யும்போது, 75 சதவீத இடங்களை பதவி உயர்வின் மூலம் பூர்த்தி செய்யவேண்டும் என்றும், 25 சதவீத இடங்களை நேரடி நியமனத்தில் பூர்த்தி செய்து கொள்ளலாம் எனவும், பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) உத்தரவு உள்ளது. இதன்படி, பிஹெச்.டி.யுடன் 12 ஆண்டுகள் உதவிப் பேராசிரியர்கள் அனுபவம் உள்ளவர்களுக்கு இணைப் பேராசிரியர் பதவி உயர்வு அளிக்கலாம்.

இத்தகைய தகுதிகள் இருந்தபோதும், 178 இணைப் பேராசிரியர்களை நேரடியாக நியமனம் செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதேபோன்ற நேரடி நியமனம் தொடர்பாக வேறொரு வழக்கில், பணி நியமனம் தொடர்பான நடவடிக்கைகள் இறுதி உத்தரவுக்கு கட்டுப்பட்டது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. 

இதையும் மீறி நேரடி நியமனத்துக்கு அறிவிப்பு வெளியிட்டிருப்பது நியாயமற்றது. எனவே, பதிவாளரின் அறிவிப்பை ரத்து செய்யவேண்டும் என அம்மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி. ஹரிபரந்தாமன், மனுதாரர் குறிப்பிட்டுள்ள நியமனம் தொடர்பான தற்போதைய நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளருக்கு உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.