Pages

Wednesday, November 4, 2015

100 பள்ளிகளில் சுற்றுச்சூழல் மன்றம் விரிவாக்கம்!

காஞ்சிபுரம் மாவட்டத்தில், 6, 7, 8 ஆகிய மூன்று வகுப்பு மாணவர்களிடையே, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்த, 100 அரசு நடுநிலைப் பள்ளிகளில், சுற்றுச்சூழல் மன்றம் விரிவாக்கம் செய்யப்பட்ட உள்ளது.
 
தமிழகத்தில், 1998ல், மாணவர்களிடையே, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, அது தொடர்பான பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகப்படுத்த, அரசு பள்ளிகளில், சுற்றுச்சூழல் மன்றம் துவங்கப்பட்டது. இத்திட்டம், 2005 வரை, 1,245 பள்ளிகளில் விரிவுபடுத்தப்பட்டது. இத்திட்டம் தற்போது தமிழகம் முழுவதும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு வரை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் என, 259 அரசு பள்ளிகளில், சுற்றுச்சூழல் மன்றம் செயல்படுத்தப்பட்டது. இந்நிலையில், 6, 7, 8 ஆகிய மூன்று வகுப்பு மாணவர்களிடையே சுற்றுச்சூழல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள, 13 ஒன்றியங்களில், 100 அரசு நடுநிலைப் பள்ளிகளில் இத்திட்டம் தற்போது விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது.

இதில், 53 பள்ளிகளில் உள்ள, திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கான பயிற்சி, நேற்று செங்கல்பட்டில் உள்ள, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. மீதமுள்ள, 47 பள்ளி ஒருங்கிணைப்பாளர்களுக்கான பயிற்சி இன்று நடைபெற உள்ளது. இந்த ஒருங்கிணைப்பாளர்கள், தண்ணீர், காற்று ஆகியவை மாசுபடுதலை தவிர்ப்பது; மரங்களை பராமரிப்பது; ஆற்றலை பயன்படுத்துதல்; குப்பையை முறையாக சேமித்தல் ஆகியவை குறித்து, மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பர். மேலும், பள்ளியின் சுற்றுப்புற பகுதிவாசிகளுக்கு, சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, மனித சங்கிலி மற்றும் தெருமுனை பிரசாரம் ஆகியவற்றில், மன்றத்தில் உள்ள மாணவர்கள் ஈடுபடுவர். இதற்காக, கல்வித் துறையால் ஒவ்வொரு பள்ளிக்கும், ஆண்டுக்கு, 5,000 ரூபாய் வழங்கப்படுகிறது.

இதுகுறித்து, சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் ஒருவர் கூறுகையில், 6, 7, 8ம் வகுப்பு மாணவர்களிடையே, சுற்றுச்சூழல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில், இந்த ஆண்டு, 100 நடுநிலைப் பள்ளிகளில், சுற்றுச்சூழல் மன்றம் துவங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் மரங்களை நட்டு, பள்ளி வளாகத்தையும், சுற்றுப்புறத்தையும் துாய்மையாக வைப்போம் என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.