Pages

Saturday, October 24, 2015

திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்கள் பதவி உயர்வு கேட்ட மனுவை பரிசீலிக்க வேண்டும் டி.என்.பி.எஸ்.சி.க்கு, ஐகோர்ட்டு உத்தரவு

திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்களுக்கு பதவி உயர்வு கேட்டு வழங்கப்பட்ட மனுவை 6 வாரத்துக்குள் பரிசீலிக்கவேண்டும் என்று டி.என்.பி.எஸ்.சி. செயலாளருக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டில், வெங்கடேசன் உள்பட 4 பேர் ஒரு மனுவை தாக்கல் செய்தார்கள். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:


பட்டப்படிப்பு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் (டி.என்.பி.எஸ்.சி.யில்.) 20 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறோம். நாங்கள் 10–ம் வகுப்பு கல்வி தகுதி அடிப்படையில் இளநிலை உதவியாளராக பணியில் சேர்ந்தோம். கடந்த 1996–ம் ஆண்டு தமிழக அரசு ஒரு உத்தரவு பிறப்பித்தது. அதில், ‘எங்களுக்கு தலைமை செயலகம் ஊழியர்களுக்கு இணையான சம்பளம் உள்ளிட்டவைகள் வழங்கப்படும் என்றும், அதற்காக 5 ஆண்டுக்குள் ஏதாவது ஒரு பட்டம் பெற்றிருக்கவேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது. இதனால், நாங்கள் திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்றோம்.

பட்டம் செல்லும்
இந்த நிலையில், தமிழக பணியாளர் மற்றும் நிர்வாக சீர்த்திருத்த துறை செயலாளர் கடந்த 2009–ம் ஆண்டு ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில், 10–ம் வகுப்பு, 12–ம் வகுப்பு அதன்பின்னர் பட்டப்படிப்பு படித்த இளநிலை பட்டப்படிப்பு மட்டுமே செல்லும் என்று கூறியுள்ளார். ஆனால், 12–ம் வகுப்பு படிக்காமல் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பெற்ற பட்டம் செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. எனவே, இந்த உத்தரவின்படி எங்களுக்கு பதவி உயர்வு வழங்கவேண்டும் என்று டி.என்.பி.எஸ்.சி. செயலாளரிடம் மனு கொடுத்தோம். இதுவரை பரிசீலிக்கப்படவில்லை.

இவ்வாறு அவர் கூறியிருந்தனர்.

பரிசீலிக்கவேண்டும்
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.சத்தியநாராயணன், மனுதாரர்களின் கோரிக்கை மனுவை தகுதி அடிப்படையில் பரிசீலித்து, தகுந்த உத்தரவை 6 வாரத்துக்குள் பிறப்பிக்கவேண்டும் என்று டி.என்.பி.எஸ்.சி. செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

1 comment:

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.