Pages

Saturday, October 24, 2015

ஆய்வக உதவியாளர் பணி 7 லட்சம் பேர் காத்திருப்பு

பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கான தேர்வு முடிவு கிடப்பில் போடப்பட்டுள்ளதால், ஏழு லட்சம் பேர், ஐந்து மாதங்களாக காத்திருக்கின்றனர். அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாகஇருந்த, 4,362 ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு, மே, 31ல் எழுத்துத் தேர்வு நடந்தது; ஏழு லட்சம் பேர் பங்கேற்றனர். இந்த தேர்வுக்கான அறிவிப்பே குளறுபடியாக இருந்ததால், ஆரம்பத்திலேயே பிரச்னைகள் ஏற்பட்டன.


பள்ளி கல்வித்துறை பதவிகளுக்கு, அந்தத் துறையின் ஒரு அங்கமான, தேர்வு துறையே பணி நியமனத்தை மேற்கொள்வதால், வெளிப்படைத்தன்மை இருக்குமா என, கேள்வி எழுந்தது. எனவே, 'எழுத்துத் தேர்வு என்பது தகுதித் தேர்வு மட்டுமே; நேர்முகத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தான் நியமனம் நடக்கும்' என, அரசு அறிவித்தது.

இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி அரிபரந்தாமன், 'எழுத்து தேர்வு மதிப்பெண்ணை கணக்கில் கொள்ளாமல், ஆட்களை தேர்வு செய்வது, நேர்மையற்ற நடவடிக்கை' என, உத்தரவிட்டார். இந்த உத்தரவு, ஜூனில் வெளியான நிலையில், ஆய்வக உதவியாளர் தேர்வு முடிவை வெளியிடாமல், கிடப்பில் போட்டு விட்டனர்.

இது குறித்து, தேர்வு எழுதிய பட்டதாரிகள் கூறுகையில், '85 லட்சம் பேர், வேலைக்காக காத்திருக்கும் நிலையில், 4,000த்துக்கும் மேற்பட்ட இடங்களுக்கு பணி நியமனம் நடப்பது, இதுவே முதல் முறை; எனவே, தேர்வு முடிவை விரைவில் வெளியிட வேண்டும்' என்றனர்.

அதிகாரிகள் கூறும்போது, 'விடைத்தாள் திருத்தப்பட்டு முடிவுகள் தயார் நிலையில் உள்ளன; அரசு உத்தரவிட்டால், அடுத்த நிமிடமே வெளியிட தயார்' என்றனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.