Pages

Tuesday, October 27, 2015

கண் குறைபாடுகள், கண்ணாடி அணிவதிலிருந்து விடுதலை – அமைதியாய் ஒரு புரட்சி

என் 9 வயது குழந்தைக்கு இடது கண்ணில் பார்வை குறைபாடு இருப்பது சமீபத்தில் தான் தெரிய வந்தது. வலது கண்ணை கைகளால் மூடிக் கொண்டு மற்றொரு கண்ணால் 10 அடி தூரத்தில் இருக்கும் எழுத்துக்களை படிக்கவைத்துப் பார்த்த போது அவனால் படிக்க முடியவில்லை.
ஆனால் அதே இடது கண்ணை கைகளால் மூடிக் கொண்டு வலது கண்ணால் 20 அடி தூரத்தில் இருக்கும் எழுத்துக்களை படிக்க முடிகிறது. இரண்டு கண்களாலும் பார்க்கும் போது இந்த குறைபாடு தெரியவதில்லை. ஆனால் பள்ளியிலே கரும்பலகையில் எழுதும் வரிகளைப் படிக்கும்போது சிரமப் படுகின்றனர். ஆனால் அதை அவர்கள் சொல்வதில்லை. எல்லோருக்கும் இப்படித்தான் இருக்கும் என்று நினைத்துவிடுகின்றனர்.


ஈரோட்டில் உள்ள மிகப் பெரிய கண் மருத்துவமணையில் பரிசோதித்த போது, நிரந்தரமாக கண்ணாடி அணிய வேண்டும் என்று சொல்லிவிட்டனர். கண்ணாடியும் வாங்கி கொடுத்துவிட்டேன்.

அடுத்த சில நாட்களில், என்னுடைய பள்ளித் தோழர் ஒருவரை சந்தித்தேன். பள்ளி நாட்களிலேயே பெரிய சோடாபுட்டிக் கண்ணாடி அணிந்திருந்தார். -6 என்ற அளவில் கண் பார்வைக் குறை அவருக்கு இருந்தது. ஆனால் நான் சந்தித்த அன்று கண் கண்ணாடி அணியாமல், பைக் ஓட்டிவந்ததை பார்த்தவுடன் மிகவும் ஆச்சரியமடைந்தேன்.

என்னப்பா, கண்ணாடி போடாத உன்னை அடையாளமே தெரியவில்லை…கண்களுக்கான அறுவைசிகிச்சை செய்து கொண்டாயா? அல்லது காண்டாக்ட் லென்ஸ்ஸா? என்று கேட்டேன்.

பாண்டிச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் கண்பார்வை குறை பாடுகளை நீக்க பயிற்சி அளிக்கின்றனர். அதில் போய் பயிற்சி பெற்று வந்தேன். கடந்த இரண்டு மூன்று வருடங்களாக கண்ணாடி அணிவதில்லை என்றதை கேட்டதும் ஆச்சரியப்பட்டுப் போனேன்.

அவரிடம் மேலும் தகவல்களை வாங்கிக் கொண்டு இளவலை அழைத்துக் கொண்டு பாண்டிச்சேரி வந்து சேர்ந்தேன்.

பாண்டிச்சேரி, கடற்கரை சாலையின், வடக்கு மூலையில், வட்டாட்சியர் அலுவலகத்திற்கு எதிரில் இந்த பள்ளி அமைந்திருக்கிறது.

திங்கட்கிழமை மதியம் 12 மணியளவில் அந்த பள்ளிக்குச் சென்றேன். அப்பள்ளிக்கு ஒவ்வொரு திங்கட்கிழமையும் விடுமுறை. ஞாயிற்றுக் கிழமை வேலை செய்கிறார்கள். எனவே மறுநாள் காலை 8 மணிக்கு வரச்சொன்னார்கள். இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயிற்சி பெற எந்த கட்டணமும் வசூலிப்பதில்லை, நாம் விருப்பப்பட்டு கொடுக்கும் நன்கொடையை மட்டும் ஏற்றுக் கொள்வதாகவும் தெரிவிக்கப் பட்டது.

விடுமுறை தினமாக இருந்த போதும், அங்கிருந்த ஒரு உதவியாளர், எங்கே தங்கியிருக்கிறீர்கள்? என்று கேட்டார். இனிதான், ஏதாவது ஹோட்டலில் அறை எடுக்க வேண்டும் என்றேன். அவசியமில்லை, ஆசிரமத்தின் விடுதியில் தங்கிக் கொள்ளுங்கள் என்று கூறி ஆசிரம விடுதியின் தொலைபேசி எண்ணை கொடுத்தார்.

அழகான தனியறை. குளியலறை இணைந்த, இரண்டு படுக்கைகள், கொண்ட அந்த அறைக்கு வாடகை நாள் ஒன்றுக்கு ரூ.70/- மட்டுமே.

செவ்வாய்கிழமை காலை 8 மணிக்கு அங்கு சென்றேன். ஆரம்ப கட்ட பெயர் பதிவு, பரிசோதனை ஆகியவற்றை முடித்து, பயிற்சி தொடங்கப் பட்டது. சுமார் 2 மணி நேரம் பயிற்சி அளித்தனர்.

கிட்டப் பார்வை, தூரப்பார்வை, போன்ற அனைத்து கண் குறைபாடுகளுக்கும் பயிற்சி அளிக்கின்றனர். நான் சென்ற போது ஹைதராபாத்திலிருந்து ஒரு தம்பதியினர் தங்கள் இரண்டு பெண்குழந்தைகளை அழைத்து வந்திருந்தனர். 8, 4 வயதுடைய அந்த இரண்டு குழந்தைகளும் கண்ணாடி அணிந்திருந்தனர். அக் குழந்தைகளின் தந்தையும் கண்ணாடி அணிந்திருந்தார்.

அவரின் நண்பரின் ஆலோசனையின் பேரில் குழந்தைகளை அழைத்துவந்திருப்பதாக சொன்னார். நேரம் ஆக ஆக, பல குழந்தைகள், நடுத்தரவயதினர், வயதானவர்கள் என்று சுமார் 30 அல்லது 40 பேர்கள் பயிற்ச்சிக்கு வந்திருந்ததை பார்க்க முடிந்தது. இதில் பல வெளிநாட்டவர்களும் அடக்கம்.

செய்வாய் முதல் ஞாயிறுவரை 6 நாட்கள் இப்பயிற்சியை நடத்துகின்றனர். காலை 8 மணிமுதல் 10 மணிவரை, மாலை 3 மணிமுதல் 5 மணிவரை. நாள் ஒன்றுக்கு 4 மணிநேரம் பயிற்சி கொடுக்கின்றனர். முறையான கண் சிமிட்டுதல், தூரத்தில் இருப்பதை படிப்பது, இருட்டு அறையில் மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் சிறு எழுத்துக்களை படிப்பது போன்ற பல பயிற்சிகள். 

ஆச்சரியப் படும் விதமாக, பயிற்சி முடிந்த ஆறாவது நாள் அங்கேயே கண் பரிசோதனை செய்து பார்த்ததில் பார்வையில் நல்ல முன்னேற்றம் தெரிந்தது. தொடர்ந்து ஆறுமாதம் பயிற்சியை தொடருங்கள் பின் கண் பரிசோதனை செய்து பாருங்கள். கண்ணாடி அணிய வேண்டிய அவசியமே வராது என்று பயிற்சியாளர் சொன்னார்.

கடந்த 40 ஆண்டுகளாக இந்த பள்ளி நடப்பதாகவும், இதுவரை ஆயிரக்கணக்கானோர் பயன்பெற்றிருப்பதாகவும் அறிந்து கொண்டேன். முன்கூட்டியே பதிவு செய்து கொண்டு செல்வது நல்லது. மார்ச் முதல் வாரம் முதல் ஜூன் முதல்வாரம் வரையிலான பள்ளிக்கூட விடுமுறை நாட்களில், அதிகமான கூட்டம் வருவதால் அந்த காலகட்டத்தில் செல்ல விரும்புபவர்கள் முன் கூட்டியே பதிவு செய்தால் தான் இடம் கிடைக்கும்.
தங்கும் விடுதி குறித்த தகவல்கள்:
http://www.sriaurobindoashram.org/vi 
 use/ghlist.php

மேலும் அதிக தகவல்களுக்கு:
http://www.motherandsriaurobindo.org/Content.aspx

பயிற்சி குறித்த மேலும் விவரங்கள்:
SCHOOL FOR PERFECT SIGHT
 PONDICHERRY

PHONE: 0413-2233659
 EMAIL:[truncated by WhatsApp]
auroeyesight@yahoo.com  this is the mail id for above msg..

3 comments:

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.