கட்டாயப் பணி மாறுதல் மூலம் வெளிமாவட்டங்களுக்குச் சென்ற ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பொதுமாறுதல் கலந்தாய்வில் முன்னுரிமை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அனைத்து வளமைய பட்டதாரி ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில மற்றும் மாவட்டச் செயற்குழு கூட்டம் மாநிலத் தலைவர் ராஜ்குமார் தலைமையில் நாமக்கல்லில் சனிக்கிழமை நடந்தது. செயலர் வாசுதேவன், பொருளர் நவநீதகிருஷ்ணன், மாநில மகளிர் அணிச் செயலர் அபிராமி, தலைமை நிலையச் செயலர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தனர். மாவட்டத் தலைவர் மாங்கனி வரவேற்றார்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: உயர்நீதி மன்ற மதுரைக்கிளை அளித்துள்ள தீர்ப்பின்படி 2013-14, 2014-15ஆம் ஆண்டுகளுக்குரிய 885 ஆசிரியர் பயிற்றுநர்கள், 2015-16-ம் ஆண்டுக்குரிய 500 ஆசிரியர் பயிற்றுநர்களை பட்டதாரி ஆசிரியர்களாக உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு பணி மாறுதல் செய்ய வேண்டும்.
ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்திய பின்னரே, புதிய பயிற்றுநர்களை காலிப்பணியிடங்களில் பணி அமர்த்த வேண்டும். ஆசிரியர் பயிற்றுநர்களை பட்டதாரி ஆசிரியர்களாக பணியிட மாறுதல் வழங்குவதற்கு 1:2 என்ற எண்ணிக்கையில் கலந்தாய்வுக்கு அழைக்க வேண்டும்.
கடந்த ஜூன் 2014ல் கட்டாயப் பணி மாறுதல் மூலம் வெளிமாவட்டங்களுக்குச் சென்ற ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வில் முன்னுரிமை வழங்க வேண்டும். உயர்கல்வி பெற்றமைக்கான ஊக்க ஊதிய உயர்வுகளை, ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு தாமதமின்றி வழங்க வேண்டும். ஆசிரியர் பயிற்றுநர்கள் மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஓரிடத்தில் பணிபுரியக் கூடாது என்ற செயல்முறையை திரும்பப் பெற வேண்டும்.
புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். வட்டார வளமையத்துக்கும், வளமையப் பயிற்சிக்கும் தேவையான மடிக்கணினி, புரொஜக்டர் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
மாநில இணைச் செயலர் ரவிச்சந்திரன், மத்திய மண்டல ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.