Pages

Wednesday, September 16, 2015

தமிழக சட்ட கல்லூரிகளில் 400 இடங்கள் காலி!

அரசு சட்டக் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் முடிந்துள்ளது; 400 இடங்கள் காலியாக உள்ளன. இதனால், இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நடத்த, சட்டப் பல்கலை முடிவு செய்துள்ளது.


அம்பேத்கர் சட்டப் பல்கலை கட்டுப்பாட்டில், சீர்மிகு சட்டப் பள்ளி மற்றும், ஏழு அரசு சட்டக் கல்லுாரிகள் உள்ளன. இதற்கான, மாணவர் சேர்க்கையை அம்பேத்கர் சட்டப் பல்கலை நடத்துகிறது. நடப்பு ஆண்டில், ஐந்து ஆண்டு மற்றும் மூன்று ஆண்டு எல்.எல்.பி., படிப்புக்கான மாணவர் சேர்க்கை, சீர்மிகு சட்டப்பள்ளியில் கடந்த மாதமே முடிந்து, வகுப்புகள் நடக்கின்றன. சட்டக் கல்லுாரிகளில், மூன்று ஆண்டு படிப்புக்கு மட்டும், வயது வரம்பு தளர்வு பிரச்னையால் தாமதமாக துவங்கியது. இவற்றில் மொத்தம் உள்ள, 1,252 இடங்களுக்கு, கடந்த வாரம் கவுன்சிலிங் முடிந்தது. ஆனால், 400 இடங்கள் காலியாக உள்ளன.


இதுகுறித்து, சட்டப் பல்கலை வட்டாரத்தில் கிடைத்த தகவல்கள்:மூன்று ஆண்டு சட்டப்படிப்புக்கு, 7,000 விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. இவற்றில், 30 சதவீதம் பேர் அதை சமர்ப்பிக்கவில்லை. கவுன்சிலிங்கில் கலந்து கொண்டவர்களில் பலர் விரும்பிய கல்லுாரி கிடைக்கவில்லை என, சேரவில்லை. மூன்று ஆண்டு படிப்பில் சேர, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், கட்-ஆப் நிர்ணயிக்கப்பட்டது. 

ஆனால், இந்த, கட்-ஆப் மதிப்பெண் மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெற்ற பலர் மருத்துவம், இன்ஜி., கால்நடை மருத்துவ படிப்புகளில் சேரவே முன்னுரிமை அளித்து உள்ளனர். அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள், சட்டப்படிப்பில் சேர முன் வரவில்லை. எனவே, கட்-ஆப் மதிப்பெண்ணை குறைத்து, இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நடத்தி, மாணவர்களை சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பல்கலை வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.