Pages

Wednesday, September 16, 2015

25 சதவீத இட ஒதுக்கீடு மாணவர் சேர்க்கை; காத்திருக்கும் பள்ளிகள்

இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ், பள்ளிகளில் சேர்க்கப்பட்ட குழந்தைகளுக்கான கல்வி கட்டணம், இன்னும் வழங்கப்படவில்லை; இது, பெற்றோர் மற்றும் தனியார் பள்ளிகள் மத்தியில், கவலையை ஏற்படுத்தியுள்ளது.


இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில், ஏழை மாணவ, மாணவியருக்கு, 25 சதவீத இட ஒதுக்கீட்டில் சேர்க்கை நடந்து வருகிறது. மாநிலம் முழுவதும், 2013-14ம் கல்வியாண்டில், 49,864; 2014-15ல், 89,954 மாணவ, மாணவியர் சேர்க்கப்பட்டனர். திருப்பூர் மாவட்டத்தில், ஐந்தாயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தனியார் பள்ளிகளுக்கு, அரசு தரப்பில் தரவேண்டிய நிதி, இரண்டு ஆண்டுகளாக ஒதுக்கப்படாததால், பள்ளி நிர்வாகங்கள் ஏமாற்றத்தில் இருந்தன; பின், 97 கோடி ரூபாய் நிதியை அரசு ஒதுக்கி, தனியார் பள்ளிகளுக்கு வழங்குவதற்காக, அனைவருக்கும் கல்வி திட்ட இயக்ககத்திடம் அளித்துள்ளது.


திருப்பூர் மாவட்டத்துக்கு மட்டும், 400க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு, 1.60 கோடி ரூபாய் வரை, வரவேண்டியுள்ளது. இந்நிதியை, தனியார் பள்ளிகளுக்கு வழங்க ஏதுவாக, இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ், கடந்த இரண்டு ஆண்டுகளில் சேர்க்கப்பட்ட மாணவ, மாணவியர் விவரத்தை அறிக்கையாக தர, மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்களுக்கு மெட்ரிக் பள்ளி இயக்குனரகம் உத்தரவிட்டது. கடந்த ஜூனில், தலைமை ஆசிரியர், உதவி தொடக்க கல்வி அலுவலர், எஸ்.எஸ்.ஏ., ஆசிரியர் பயிற்றுனர், உதவியாளர் என, நால்வர் கொண்ட குழு, பள்ளிகளில் ஆய்வு நடத்தி, அறிக்கை சமர்பித்தது.

இப்பணி முடித்து இரண்டரை மாதங்கள் கடந்தும், இதுவரை பள்ளிகளுக்கான நிதி வராததால், தனியார் பள்ளிகள் ஏமாற்றத்தில் உள்ளன; சில பள்ளிகளில், 25 சதவீத இட ஒதுக்கீட்டில் சேர்க்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோரிடம், பள்ளி நிர்வாகங்கள், கடந்த கல்வியாண்டில் கட்டணம் வசூலித்துள்ளன. நிதி ஒதுக்கீடு வந்ததும், அத்தொகையை திருப்பி தருவதாக, ஒப்புதல் அளித்துள்ளதால், நிதி ஒதுக்கீடு எப்போது என, பெற்றோர் தரப்பிலும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்ட குழந்தைகள் பற்றிய ஆய்வறிக்கையில், தவறு இருந்ததால், மீண்டும் விவரங்கள் சேகரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. தனியார் பள்ளியில் சேர்க்கப்பட்ட மாணவன், வேறு பள்ளிக்கு மாறுதலாகிச் சென்றிருக்கும் பட்சத்தில், இரண்டு பள்ளிகளும் இக்கட்டணத்தை பெற விண்ணப்பித்தல், கல்வி கட்டண நிதி ஒதுக்குவதால், சில பள்ளிகள் போதிய மாணவர்களை சேர்க்காமல், தவறான புள்ளி விவரம் தருவது, வங்கி கணக்கு எண்களில் பிழை, வகுப்புகளுக்கு ஏற்ப, நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் கேட்பது போன்ற காரணங்கள் ஆராயப்பட்டு, அதில் இருந்த குறைகள், தவறுகள் சரிசெய்யப்பட்டன.

இன்னும் சில நாட்களில் திருத்தப்பட்ட முழுமையான அறிக்கை, மெட்ரிக் பள்ளி இயக்குனரகத்தில் ஒப்படைக்கப்படும். இதுவரை, 14 மாவட்டங்களே கல்வி கட்டணம் குறித்த முழுவிவர அறிக்கை தந்துள்ளன. பிற மாவட்ட கல்வி துறை அறிக்கை அளித்தபின், பள்ளிகளுக்கான கட்டணம் வழங்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.