தமிழக உயர் கல்வித்துறையில், கல்வியாளர்கள் அலங்கரித்த பல்கலை துணைவேந்தர் பதவிகளை, அரசியல் பின்னணியில் இருப்பவர்கள் மட்டுமே கைப்பற்ற முடியும் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதை தவிர்க்க பல்கலைக்கான பொதுச் சட்டத்தை (காமன் யுனிவர்சிட்டி ஆக்ட்) தமிழக அரசு அமல்படுத்த வேண்டும் என கல்வியாளர்கள் வலியுறுத்துகின்றனர். தமிழகத்தில் உள்ள 22 பல்கலைகளில், மதுரை காமராஜ், கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர், நெல்லை மனோன்மணியம் சுந்தர னார், வேலுார் திருவள்ளுவர் பல்கலை உட்பட பல முக்கிய பல்கலைகளில், துணைவேந்தர் பணியிடங்கள் காலியாக உள்ளன. மதுரை காமராஜ் பல்கலையில் கடந்த ஏப்., 8ல் துணைவேந்தர் கல்யாணியின் பதவிக்காலம் முடிந்தும், நான்கு மாதங்கள் கடந்த நிலையில் இதுவரை புதிய துணைவேந்தர் நியமிக்கப்படவில்லை.
காற்றில் பறக்கும் நடைமுறைகள்
துணைவேந்தர் பணிக்காலம் முடிவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே, புதிய துணைவேந்தரை தேர்வு செய்யும் நடைமுறை, எந்த பல்கலைகளிலும் பின்பற்றப்படுவதில்லை. உதாரணமாக, மதுரை காமராஜ் பல்கலையில் துணைவேந்தராக பணியாற்றிய கற்பககுமாரவேலுக்கு 2011ல் பதவி காலம் முடிந்தது. ஆனால், அதன்பின் ஓராண்டாக புதிய துணைவேந்தர் நியமிக்கப்படவில்லை. இதற்கு புதிய துணைவேந்தரை தேர்வு செய்யும் நடைமுறையை அவர் உரிய காலத்தில் மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இதன்பின் வந்த துணைவேந்தர் கல்யாணி ஓய்வுபெற்ற போதும், இதே நடைமுறையை தான் பின்பற்றியதாக சர்ச்சை எழுந்தது. இதற்கு காரணம் அவர்கள் மீண்டும் ஒருமுறை, அந்த பதவியை எதிர்பார்த்து காய் நகர்த்தியது தான். அதற்கேற்ப மதுரை காமராஜ் பல்கலை புதிய துணைவேந்தர் பதவிக்கு, கல்யாணி மீண்டும் விண்ணப்பித்துள்ளார். இதுதவிர வேறு பல்கலைகளின் முன்னாள் துணைவேந்தர்கள் குணசேகரன், மணிமேகலை, முத்துச்செழியன் உட்பட நான்கு பேர் மீண்டும் விண்ணப்பித்து உள்ளனர்.
மாறும் பல்கலை சட்டங்கள்
அதேபோல் ஒவ்வொரு பல்கலைக்கும் ஒருவகையான சட்டம் பின்பற்றப்படுகிறது. உதாரணமாக சென்னை, மதுரை காமராஜ் பல்கலை சட்டங்களுக்கும், பிற பல்கலைக்கும் சட்டங்கள் மாறுபடுகின்றன. சென்னை, காமராஜ் பல்கலையில் உதவி மற்றும் இணை பேராசிரியர்கள், பேராசிரியர்கள் ஓய்வு வயது 60. ஆனால் பிற பல்கலைகளில் 58. புதுச்சேரி மத்திய பல்கலையில் 62 வயது என நடைமுறை பின்பற்றப்படுகின்றன.
ஆனால், துணைவேந்தர் ஓய்வு காலத்தை தற்போது 70 வரை அதிகரித்து வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனால் ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் மூன்று முறை கூட துணைவேந்தர் பதவி வகிக்க காலம் கைகூடுகிறது. துணைவேந்தர் பதவி காலம் மூன்றாண்டுகள். எனவே அவர்கள் ஒரு முறை மட்டுமே பதவி வகிக்கும் வகையில், விண்ணப்பிக்கும் வயதையும், ஓய்வு வயதையும் நிர்ணயிக்க வேண்டும்.பேராசிரியர் ஒருவர் ஐம்பது வயதில் துணைவேந்தராகி,
மூன்றாண்டுகள் பணிபுரிந்து விட்டு, மீண்டும் தான் பணிபுரிந்த துறையில் இன்னொருவர் கீழ் பணிபுரிவது தர்மசங்கடத்தை ஏற்படுத்துகிறது.இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு வயது வரம்பை நிர்ணயிக்க வேண்டும். பொது சட்டம் பின்பற்றப்படுமா: இதுபோன்று பல்வேறு நடைமுறை குழப்பங்களுக்கு முடிவு கட்டத்தான் 2011ம் ஆண்டில் பல்கலைக்கான பொதுச் சட்டம் உயர் கல்வித்துறை சார்பில் கொண்டு வரப்பட்டது. ஆனால் இதை அமல்படுத்துவதில் அரசியல் பின்னணி காரணமாக தொடர்ந்து முட்டுக்கட்டை நிலவுகிறது.
இச்சட்டம் அமல்படுத்தப்பட்டால் பல்கலையில் உள்ள செனட் (ஆட்சிமன்றம்) மற்றும் அகடமிக் (கல்விப் பேரவை) அமைப்புகள் இணைந்து அகடமிக் செனட் என்ற ஒரே அமைப்பாக செயல்படும். இதில், செனட்டில் உள்ளது போல் பல்கலைக்கு சம்பந்தமில்லாதவரை தேர்வு செய்ய முடியாது. அதேபோல் சிண்டிகேட் (ஆட்சிக் குழு) அமைப்பிலும் கல்வித் துறைக்கு சம்பந்தமில்லாதவர்களை நியமிக்க முடியாது. மேலும் துணைவேந்தர் பதவி காலம் முடிந்த பின், புதிய துணைவேந்தர் நியமிக்கும் வரை ஏற்படுத்தப்படும் கன்வீனர் கமிட்டிக்கு பதிலாக மூத்த பேராசிரியரே துணைவேந்தர் பொறுப்புக்களை கவனிக்க முடியும்.
இதுபோன்ற கிடுக்கிப்படிகளால் தான் பல்கலைக்கான பொதுச்சட்டத்தை அமல்படுத்துவதற்கு, அரசியல் பின்னணியுடன் முட்டுக்கட்டை போட்டு வருகின்றனர். பல்கலை பொதுச்சட்டம் போன்ற சீர்திருத்தங்களை, உயர் கல்வித்துறை உடனடியாக அமல்படுத்த வேண்டியது அவசியம்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.