இந்தக் கல்வியாண்டுக்கான (2015-16) பொறியியல் சேர்க்கை முழுமையாக நிறைவடைந்தது. கடந்த ஒரு மாதமாக நடந்த கலந்தாய்வில் 1,07,969 பேர் பி.இ. படிப்புகளில் சேர்ந்துள்ளனர். அதேவேளையில், தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் 94,453 பி.இ. இடங்கள் மாணவர்கள் சேராமல் காலியாக உள்ளன.
பொறியியல் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது.
2014-15ஆம் ஆண்டுக்கான பி.இ. கலந்தாய்வு ஜூன் 28-இல் தொடங்கியது. தமிழகம் முழுவதும் 536 பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரிகளில் மொத்தம் 2,02,422 இடங்கள் இடம்பெற்றிருந்தன. முதல் நாளில் விளையாட்டுப் பிரிவினருக்கும், ஜூன் 29-ஆம் தேதி மாற்றுத் திறனாளிகளுக்கும் பொறியியல் சேர்க்கை நடத்தப்பட்டது. ஜூலை 1-ஆம் தேதி முதல் ஜூலை 28-ஆம் தேதி வரை பொதுப் பிரிவு மாணவர்களுக்கான சேர்க்கை நடத்தப்பட்டது.
ஜூலை 29, 31 தேதிகளில் பிளஸ் 2 தொழில் பிரிவு மாணவர்களுக்கான சேர்க்கை நடைபெற்றது. ஆகஸ்ட் 1-ஆம் தேதியன்று பிளஸ் 2 சிறப்புத் துணை தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கான சேர்க்கை நடைபெற்றது. இதில் 1,690 பேர் சேர்க்கை பெற்றனர்.
இறுதி நாளான ஆகஸ்ட் 2-ஆம் தேதி, காலியாக உள்ள எஸ்.சி.ஏ. பிரிவினரின் பி.இ. இடங்களில் எஸ்.சி. பிரிவினரைச் சேர்க்கும் கலந்தாய்வு நடத்தப்பட்டது. இதில் 207 பேர் இடங்களைத் தேர்வு செய்து, கல்லூரி சேர்க்கைக் கடிதங்களைப் பெற்றனர்.
ஒட்டுமொத்த பொறியியல் சேர்க்கையும் ஞாயிற்றுக்கிழமையோடு நிறைவு பெற்றுவிட்ட நிலையில், இதுவரை 67,394 மாணவர்கள், 40,575 மாணவிகள் உள்பட மொத்தம் 1,07,969 பேர் சேர்க்கை பெற்றுள்ளனர். எனினும், 94,453 இடங்கள் காலியாக உள்ளன. சேர்க்கை பெற்றவர்களில் 59,073 பேர் முதல் தலைமுறை மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சேர்க்கை குறைந்த கல்லூரிகள்: 2015-16 பொறியியல் சேர்க்கை முடிந்துவிட்ட நிலையில் 33 கல்லூரிகளில் 60 சதவீத அரசு ஒதுக்கீட்டு பி.இ. இடங்கள் நிரம்பவில்லை என்று தெரியவந்துள்ளது. இந்தக் கல்லூரிகளில் முக்கியத் துறைகளில் 50-க்கும் மேற்பட்ட இடங்கள் சேர்க்கையின்றி காலியாக உள்ளன.
இவற்றில் பெரம்பலூரில் உள்ள ஒரு கல்லூரியில் மின்னணுவியல் தொடர்பியல் பிரிவில் 111 இடங்களும், இயந்திரவியல் பிரிவில் 99 இடங்களும், கட்டுமானப் பொறியியல் பிரிவில் 95 இடங்களும், மின்னியல், மின்னணுவியில் பிரிவில் 72 இடங்களும் கணினி அறிவியல் பிரிவில் 70 இடங்களும் நிரம்பவில்லை.
திருவள்ளூரில் உள்ள ஒரு கல்லூரியில் மின்னியல்- மின்னணுவியல் பிரிவில் 101 இடங்கள் நிரம்பிவில்லை. திருவண்ணாலையில் உள்ள ஒரு கல்லூரியில் மின்னியல்- மின்னணுவியல் பிரிவில் 118 இடங்கள் நிரம்பிவில்லை.
காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு கல்லூரியில் மின்னியல்- மின்னணுவியல் பிரிவில் 97 இடங்கள் நிரம்பிவில்லை. மற்றொரு கல்லூரியில் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் 102 இடங்கள் நிரம்பவில்லை. திண்டுக்கல்லில் உள்ள ஒரு கல்லூரியில் மின்னியல் மின்னணுவியல் பிரிவில் 91 இடங்கள் நிரம்பவில்லை.
இயந்திரவியலே முதலிடம்: பொறியியல் சேர்க்கைக் கலந்தாய்வில் துறைகளைப் பொருத்த வரை இயந்திரவியல் பிரிவே அதிக மாணவர் சேர்க்கை பெற்ற பிரிவாக உள்ளது. இந்தப் பிரிவில் 26,942 பேர் சேர்க்கை பெற்றுள்ளனர்.
அடுத்தபடியாக மின்னணுவியல் தொடர்பியல் பிரிவில் 18,707 பேரும், கட்டுமானப் பொறியியல் பிரிவில் 15,089 பேரும், கணினி அறிவியல் பிரிவில் 15,056 பேரும், மின்னியல்- மின்னணுவியல் பிரிவில் 12,384 பேரும் சேர்க்கை பெற்றுள்ளனர்.
முதலாமாண்டு வகுப்புகள் இன்று தொடக்கம்
பொறியியல் சேர்க்கை நிறைவுபெற்ற நிலையில் திங்கள்கிழமை (ஆக. 3) முதல் பொறியியல் முதலாமாண்டு வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளர் கணேசன் கூறியது:
பொறியியல் முதலாமாண்டு வகுப்புகள் ஆகஸ்ட் 3-ஆம் தேதி தொடங்கப்பட வேண்டும் என்று பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள கிண்டி பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் திங்கள்கிழமை தொடங்கப்பட உள்ளன.
இணைப்புக் கல்லூரிகளைப் பொருத்த வரை ஏராளமான கல்லூரிகள் ஏற்கெனவே கல்லூரிகளைத் திறந்துவிட்டன. சில கல்லூரிகள் பல்வேறு காரணங்களால் பல்கலைக்கழகம் அறிவித்த தேதிக்குப் பிந்தைய தேதியில் கல்லூரியைத் திறக்க வாய்ப்பு உள்ளது என்றார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.