தமிழகத்தில் உள்ள, 690 கல்வியியல் கல்லூரிகளில் உள்ள, 75 ஆயிரம் இடங்களுக்கான, பி.எட்., - எம்.எட்., படிப்புக்கான, மாணவர் சேர்க்கை அறிவிப்பு, 7ம் தேதிக்குள் வெளியாகும் என, உயர் கல்வித்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
ஆசிரியர் பயிற்சி பட்டப்படிப்பான பி.எட்., - எம்.எட்., - பி.பி.எட்., படிப்புகளுக்கு, நாடு முழுவதும் புதிய விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என, அனைத்து மாநிலங்களுக்கும், தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சிலான, என்.சி.டி.இ., உத்தரவிட்டுள்ளது.
இந்த விதிமுறைகளுக்கு எதிராக, தனியார் கல்வியியல் கல்லூரிகள், உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளன. ஆனாலும், இந்த ஆண்டு முதல் புதிய விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்ற நிபந்தனையுடன், தமிழகத்தில் உள்ள, 690 கல்லூரிகளுக்கும் என்.சி.டி.இ., அங்கீகாரம் அளித்துள்ளது.
இந்த ஆண்டு முதல், புதிய விதிமுறைகள் தான் பின்பற்றப்படும், நீதிமன்ற உத்தரவுக்கு ஏற்ப இதில் முடிவுகள் மாறும் என, தமிழக அரசும் அரசாணை வெளியிட்டுள்ளது. எனவே, இந்த ஆண்டு இந்தப் படிப்புகள், ஓர் ஆண்டிலிருந்து இரண்டு ஆண்டுகளாக மாறுகிறது. இதற்கான புதிய பாடத்திட்டமும் அமலாகிறது.
பி.எட்., மாணவர் சேர்க்கை துவங்குவதில், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை, உயர்கல்வி மன்றம் மற்றும் கல்லூரிக் கல்வி இயக்ககம் ஆகியவற்றின் இடையே முடிவு எடுப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதுகுறித்து, கடந்த வாரம், நமது நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, லேடி வெலிங்டன் கல்லூரியை, மாணவர் சேர்க்கை முகமையாக, தமிழக அரசு நிர்ணயம் செய்து அறிவிப்பு வெளியிட்டது.
இதுகுறித்து, உயர்கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:
கடந்த ஆண்டு, ஆசிரியர் கல்வியியல் பல்கலை, மாணவர் சேர்க்கையை நடத்தியது. அதற்குமுன், லேடி வெலிங்டன் கல்லூரியே நடத்தியது. இந்த ஆண்டு முதல், லேடி வெலிங்டன் கல்லூரியே மாணவர் சேர்க்கை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
ஒற்றைச் சாளர முறையில், மாணவர் சேர்க்கையை நடத்தும் அறிவிப்பு, வரும் 7ம் தேதிக்குள் வெளியாகும். நீதிமன்ற உத்தரவுக்காக, இந்த தாமதம் ஏற்பட்டுள்ளது. வேறு எதுவும் பிரச்னை இல்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.