Pages

Wednesday, July 29, 2015

கல்லூரி பேராசிரியரான கலாமின் ஓட்டுநர்!

கார் ஓட்டுநராக தன்னிடம் பணியாற்றியவரை கல்லூரிப் பேராசிரியர் நிலைக்கு உயர்த்தியவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம். 1980 காலக்கட்டங்களில் ஆந்திர மாநிலம், ஹைதராபாதில் உள்ள டிஆர்டிஓ அலுவலகத்தில் "அக்னி', "திரிசூலம்' ஏவுகணைகளை தயாரிக்கும் பணியில் விஞ்ஞானியாக டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் பணியாற்றினார். அப்போது அவரிடம் கார் ஓட்டுநராகப்  பணியாற்றியவர் வி.கதிரேசன் (53). விருதுநகர் மாவட்டம், சாத்தூர் தாலுகா, ஏழாயிரம் பண்ணை அருகே உள்ள சங்கரபாண்டியபுரத்தைச் சேர்ந்தவர்.
தற்போது திருநெல்வேலியில் உள்ள ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் வரலாற்றுத் துறையின் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். இன்றைய நிலையில் இவருக்கு பின்னால் பி.ஏ., எம்.ஏ., பி.எட்., எம்.எட்., எம்.ஃபில். என்ற பட்டங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
அப்துல் கலாம் உயிரிழந்த சோக நிகழ்வு குறித்து  அவர் பகிர்ந்து கொண்ட நினைவலைகள் வருமாறு:
"கலாம், ஹைதராபாதில் இருந்த போது அவருடன் 1982-92 காலக்கட்டம் வரை அவரின் கார் ஓட்டுநராகப் பணியாற்றினேன். அவரிடம் பணியில் சேரும் போது 9-ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்தேன். படிப்பின் மீது எனக்கு இருந்த ஆர்வத்தை கண்டறிந்து, என்னை மேலும் படிக்க ஊக்கப்படுத்தினார். இதையடுத்து பள்ளி, கல்லூரிகளில் படிக்க வாய்ப்பு ஏற்படுத்தி தந்ததுடன், தேர்வு எழுத விமானம் மூலமாகச் செல்லவும் எனக்கு உதவி புரிந்தவர்.
பணியிடங்களிலும் அவர், எந்த பாகுபாடும் இன்றி அனைவரிடமும் அன்புடன் பழகுவார். இரவு எவ்வளவு நேரம் உழைத்தாலும், அதிகாலை 4 மணிக்கே எழுந்து விடுவார். அவரிடம் கார் ஓட்டுநராகப் பணியாற்றினாலும், என்னை எப்போதும் அவர் மறந்ததில்லை. எங்கள் ஊர் அருகே வரும் போது எல்லாம், என்னைத் தொடர்பு கொண்டு அழைத்துப் பேசுவார். தற்போது அவர் மறைந்த செய்தி என் மனதை உலுக்கிவிட்டது. அவரது இறுதி நிகழ்வில் பங்கேற்பதற்காக ராமேஸ்வரம் செல்கிறேன்' என்றார் அவர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.