மத்திய அரசின் மதிய உணவுத் திட்டத்துக்கு காமராஜர் பெயர் சூட்டுவது குறித்து பிரதமர் கவனத்துக்கு கொண்டு சென்று, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய ஊரக மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார். நாடார் மஹாஜன சங்கம் சார்பில், காமராஜரின் 113ஆவது பிறந்தநாள் விழா கல்வித் திருவிழாவாக, விருதுநகரில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் வெங்கய்ய நாயுடு மேலும் பேசியது:
மக்களுக்காக தங்களது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொள்பவர்கள் இறந்தாலும், மக்கள் மனதில் என்றென்றும் நினைவில் நிற்கின்றனர். அதற்கு உதாரணமாக காமராஜரை குறிப்பிடலாம். காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சியிலும், ஆட்சி நிர்வாகத்திலும் காமராஜர் திறம்பட செயலாற்றினார். ஆனால், இன்று அக்கட்சி மீள முடியாத அளவுக்கு மக்களிடம் நம்பிக்கையை இழந்து வருகிறது. நெருக்கடி நிலையை விரும்பாத காமராஜர், அன்றைய சூழலில் பல தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டதை நினைத்து வருந்தினார். அவர் ஒரு கட்சிக்கு மட்டும் சொந்தக்காரர் அல்ல. தேசத்தின் சொத்து.
காமராஜர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், அவரை பாஜக போற்றுகிறது. நாட்டின் வளர்ச்சிக்காக, அவர் எத்தகைய வழியில் செயலாற்றினாரோ, அதேவழியில் பிரதமர் நரேந்திர மோடி செயலாற்றி வருகிறார். காமராஜர் ஆட்சிக்கும், நரேந்திர மோடியின் ஆட்சிக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன.
இன்றைய சூழலில் பெரும்பாலான கட்சித் தலைவர்கள் முதலில் தனது நலம், பின்னர் கட்சி நலம், அதன் பிறகே நாட்டின் நலத்தைப் பற்றிக் கவலைப்படுகின்றனர். நாட்டின் நலனுக்கு பாஜக முக்கியத்துவம் அளிக்கிறது. அரசியல் என்பது தேர்தல் வரை மட்டும்தான் என பாஜக நம்புகிறது. அதற்கு பிறகு கட்சி பாகுபாடின்றி நாட்டின் வளர்ச்சிக்கு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதை அரசு, அரசியலாகப் பார்க்கவில்லை. மாநிலங்களில் எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், அக்கட்சியுடன் இணக்கமாகச் செயல்பட்டு ஒட்டுமொத்த தேசத்தின் வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதே இலக்கு. மதிய உணவுத் திட்டத்துக்கு காமராஜர் பெயர் சூட்டுவது குறித்து பிரதமர் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
விழாவில், மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், தேசிய பசுமைத் தீர்ப்பாய நீதிபதி பி. ஜோதிமணி, தமிழக பாஜக தலைவர் தமிழிசை செüந்தரராஜன், பத்திரிகையாளர் எஸ். குருமூர்த்தி, காவல் துறை முன்னாள் ஐ.ஜி. ஒய். ஜான்நிக்கல்சன், சுதேசி விழிப்புணர்வு இயக்க மாநில இணை அமைப்பாளர் ஆர். சீனிவாசன், நாடார் மஹாஜன சங்க பொதுச் செயலர் ஜி. கரிக்கோல்ராஜ், தலைவர் ஆர். முத்துசாமி, தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி இயக்குநர் பி. மகேந்திரவேல் உள்ளிட்டோர் பேசினர்.
காமராஜர் ஒரு சமுதாயத்துக்கு மட்டுமே சொந்தமானவர் அல்ல: எஸ். குருமூர்த்தி
காமராஜர் ஒரு சமுதாயத்துக்கு மட்டுமே சொந்தமானவர் அல்ல என பொருளாதார நிபுணரும், பத்திரிகையாளருமான எஸ். குருமூர்த்தி தெரிவித்தார். விருதுநகரில் நாடார் மஹாஜன சங்கம் சார்பில் புதன்கிழமை நடைபெற்ற கல்வித் திருவிழாவில் அவர் மேலும் பேசியது:
தன்னலமற்ற உயர்ந்த மனிதர்களால்தான் இந்த சமூகம் முன்னேற்றம் அடைந்திருக்கிறது. ஆனால், அத்தகையோரைப் பற்றி பாடத் திட்டங்களிலோ, ஊடகங்கள் மூலமாகவோ தெரிவிக்கப்படுவதில்லை. நாட்டுக்கு உழைத்தவர்களின் வரலாற்றை மக்களுக்கு எடுத்துச் செல்ல இத்தகைய விழாக்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
காமராஜரின் இலவசக் கல்வித் திட்டம் இல்லையெனில் நான் படித்து ஆடிட்டர் ஆகியிருக்க முடியாது. கல்வியால் மட்டுமே ஏழ்மை நிலையில் இருப்பவர்கள் உயர்நிலைக்கு வர முடியும் என்று நம்பியவர் காமராஜர். கடுமையான சட்ட விதிகள் பலவற்றை எளிமைப்படுத்தியவர்.
இப்போது அரசியல் கட்சிகள் எல்லாம், காமராஜரின் ஆட்சியை அமைப்போம் என்று தான் கூறுகின்றன. மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் பலர் மீது சொத்து குவிப்பு வழக்குகள் தொடரப்படுகின்றன. அவர்களும் அதை சட்டரீதியாகச் சந்திப்போம் என்று கூறுகின்றனர். ஆனால், காமராஜர் சொத்து என்றால் என்னவென்று அறியாதவராக, நேர்மையுடனும். கண்ணியத்துடனும் வாழ்ந்தார். அவர் ஒரு சமுதாயத்துக்கு மட்டும் சொந்தக்காரர் அல்ல. மக்களுக்காகவும், நாட்டுக்காகவும் வாழ்ந்தவர். இத்தகைய விழாக்கள், தன்னலமற்ற தலைவர்களின் சேவையை எடுத்துக்காட்டும் விழாவாக இருக்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.