அனைத்துத் துறைகளிலும் மாற்றத்தைச் சிறந்த முறையில் மேற்கொள்ள அடித்தளமாக அமைவது கல்வியாகும் என்று அனைவருக்கும் கல்வி இயக்க ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார வளமைய மேற்பார்வையாளர் எஸ்.மாடசாமி கூறினார்.
உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு நடைபெற்ற பயிற்சி முகாமை நகர்மன்ற கம்மாப்பட்டி நடுநிலைப் பள்ளி குறுவளமையத்தில் தொடங்கி வைத்து அவர் கருத்துரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
எந்த ஒரு நாடும் வளர்ச்சியடைய மாற்றம் இன்றியமையாதது. மாற்றம் ஒன்றே வளர்ச்சிக்கு அறிகுறி. ஆதிமனிதன் ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குச் செல்ல நடைப்பயணம் மேற்கொண்டான். படிபடியாக மாற்றம் ஏற்பட்டு இன்று தொலைவு என்பது குறுகிவிட்டது. கடினம் எளிமையாகிவிட்டது. இந்த மாற்றத்தை, இந்த வளர்ச்சியை மனிதன் அனைத்துத் துறைகளிலும் ஏற்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறான்.
அனைத்துத் துறைகளிலும் மாற்றத்தைச் சிறந்த முறையில் மேற்கொள்ள அடித்தளமாக அமைவது கல்வியாகும். இதனைக் கருத்தில்கொண்டு தரமான கற்றல் அடைவை நோக்கிக் குழந்தைகளைக்கொண்டு செல்லும் விதமாக, தேசிய கலைத்திட்ட வரைவு-2005 ல் பரிந்துரைக்கப்பட்டுள்ள குழந்தை மையக் கல்வி முறை, ஆக்கப்பூர்வமான கற்றல், வாழ்க்கையோடு தொடர்புபடுத்திக் கற்றல், தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு ஆகிய கருத்துக்களை அடித்தளமாகக் கொண்டு கடந்த 6 ஆண்டுகளாக உயர் தொடக்க வகுப்புகளில் கற்பிக்கும் முறையில் வளர்ச்சியைக் கொண்டுவர படைப்பாற்றல் கற்றல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
மாற்றம் கல்வி முறையில் மட்டும் வந்தால் போதாது என்று கருதிய, தமிழக அரசு தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறையை உயர் தொடக்கப் பள்ளிகளில் 2012-13ம் கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்தி வருகிறது. ஆசிரியர்கள் பயிற்சிகளை முழுமையாகப் பயன்படுத்தி, இதனை மாணவர்களுக்குக் கொண்டு சென்று அவர்களை முன்னேற்றப்பாதையில் அழைத்துச் செல்ல வேண்டும் என்றார் அவர்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் 4 மையங்களில் நடைபெற்ற இப் பயிற்சியில் 260 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியப் பயிற்றுநர்கள் த.கணேஷ்வரி, மீனலோஷினி, சுந்தரேஸ்வரி, முத்துலட்சுமி, மாரியப்பன், கற்பகம், தர்மர், ஜூடு அமலன், பழனிச்சாமி, மருத்தக்காளை ஆகியோர் பயிற்சியின் கருத்தாளர்களாக செயல்பட்டனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.