கற்பித்தலில் அலட்சியம் காட்டியும், பல்வேறு புகார்களுக்கு உள்ளாகி, உப்பாரப்பட்டி துவக்கப்பள்ளி, இடைநிலை ஆசிரியர், நேற்று அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
சேலம் மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கக கூடுதல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி, கடந்த ஜூலை, 24ம் தேதி, உப்பாரப்பட்டி துவக்கப்பள்ளியில், திடீர் ஆய்வு நடத்தினார்.
இங்கிருந்த இடைநிலை ஆசிரியர் ராம்குமார், ஆசிரியர் சங்கத்தின் பெயரை பயன்படுத்திக்கொண்டு, கல்வித்துறை அலுவலர்களை மிரட்டல் விடுத்து, கற்பித்தல் பணிகளில் தொடர்ந்து அலட்சியம் காட்டி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, இடைநிலை ஆசிரியர் ராம்குமார் நேற்று, சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை சேலம் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்(பொறுப்பு) வளையாபதி, ராம்குமாரிடம் வழங்கினார். இந்த அதிரடி உத்தரவு, ஆசிரியர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அப்பகுதி ஆசிரியர்கள் கூறியதாவது:
உப்பாரப்பட்டி துவக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர், டாட்டா சேலம் என்ற பெயரில் ஆசிரியர் சங்கத்தை நடத்தி வருகிறார். இவர் பள்ளி நேரத்தில், பள்ளிக்கு வராமலும், அப்படியே வந்தாலும், கற்பித்தல் பணிகளில் ஈடுபடாமல், எந்நேரமும் சமூக வளைதளங்களில் மூழ்கியிருப்பதும் இப்பகுதி மக்களின் புகாராக இருந்து வந்தது.
இதை கேட்கும் உயர் அலுவலர்களை, சங்கத்தை உபயோகப்படுத்தியும், சமூக வலைதளங்களில், அவதூறாக எழுதிவிடுவதாகவும் மிரட்டல் விடுத்து வந்தார். ஏற்கனவே இவருக்கு, "17 பி&' சார்ஜ் மெமோ வழங்கப்பட்டுள்ளது.
அதற்கான விசாரணையிலும், சரியாக ஒத்துழைக்காமல், விசாரணை அதிகாரியையே மிரட்டும் போக்கு தொடர்ந்து வந்தது. இந்நிலையில், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் நடத்திய திடீர் விசிட்டிலும், பல்வேறு ஆதாரங்களுடன் சிக்கியதால், சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
ஆசிரியர் சங்கத்தை தவறாக பயன்படுத்துபவர்களுக்கு இது ஒரு முன்னுதாரணமாக இருக்கும்.இவ்வாறு, அவர்கள் கூறினர். இதுகுறித்து சேலம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ஞானகவுரி கூறியதாவது:
இடைநிலை ஆசிரியர் ராம்குமார், குழந்தைகளின் கற்பித்தலுக்காக வழங்கப்பட்டிருந்த, ஏ.பி.எல்,. வண்ண அட்டைகளை பார்சல் பிரிக்காமலேயே வைத்திருந்தார். மேலும் அடைவுத்திறன் குறித்த பதிவேடுகளை பராமரிக்கவில்லை. இந்த ஆண்டுக்கான அனைத்து விடுப்புகளையும், தற்போதே எடுத்து முடித்துள்ளார்.
அதில், மருத்துவ விடுப்புக்கான சான்றிதழ் சமர்பிக்கப்படவில்லை. இதுமட்டுமின்றி, அவர் மீது பல்வேறு புகார்களும், 17 பி சார்ஜூம் இருந்ததால், சஸ்பெண்ட் செய்ய, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலருக்கு பரிந்துரை செய்ததின் அடிப்படையில், இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.