Pages

Thursday, July 16, 2015

விரைவில் 500 ஆசிரியர்கள் நியமனம்; முதல்வர் அறிவிப்பு

புதுச்சேரியில் 500 ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பட உள்ளதாக முதல்வர் ரங்கசாமி பேசினார். பாகூர் தொகுதிக்குட்பட்ட குருவிநத்தம் பாரதிதாசன் அரசு உயர் நிலைப்பள்ளி, ஏம்பலம் தொகுதி கிருமாம்பாக்கம் அம்பேத்கர் அரசு மேல்நிலைப்பள்ளிகளில், கட்டப்பட்ட புதிய வகுப்பறை கட்டடம் திறப்பு விழா நேற்று நடந்தது.


பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் குமார் வரவேற்றார். அமைச்சர்கள் தியாகராஜன், ராஜவேலு தலைமை தாங்கினர். ராதா கிருஷ்ணன் எம்.பி.,முன்னிலை வகித்தார். புதிய வகுப்பறை கட்டடங்களை திறந்து வைத்து முதல்வர் ரங்கசாமி பேசியதாவது:

காமராஜர் எண்ணத்தின் அடிப்படையில் புதுச்சேரி அரசு பல நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக ஏழை மாணவர்களுக்கு, அனைத்து வசதிகளுடன் இலவச கல்வி அளிக்கப்பட்டு வருகிறது. 

தனியார் பள்ளிகளுக்கு, நிகராக அரசு பள்ளியில் தரமான சீருடைகள் வழங்கப்பட்டுள்ளது.ஆசிரியர் நியமனம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால், புதுச்சேரியில் ஆசிரியர் பற்றாக்குறை இருந்து வருகிறது. அந்த வழக்கு முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகிறோம். 

விரைவில், 500 ஆசிரியர் பணியிடம் நிரப்பட உள்ளது. இதன் மூலம் எதிர்காலத்தில் ஆசிரியர் பற்றாக்குறை என்ற நிலை இருக்காது. பணம் செலவழித்து தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் மீது, பெற்றோர் அதிக கவனம் செலுத்துகின்றனர். 

அரசு பள்ளியில் இலவச கல்வி பெறும் மாணவர்களின் மீது, பெற்றோர்கள், கவனம் செலுத்த வேண்டும். புதுச்சேரி அரசு அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. ஆனால், நிதி இல்லை என்று பலர் புலம்பி வருகின்றனர். அரசை நிர்வாகம் செய்யும், எனக்கு மட்டும் தான் நிதி இருக்கிறதா, இல்லையா என்பது தெரியும். 

ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் சில திட்டங்களை செயல் படுத்துவதில் தொய்வு ஏற்பட்டது. அதை சரி செய்து, தற்போது வீடு கட்டும் திட்டம் உட்பட பல திட்டங்களும் சிறப்பான முறையில் நடக்கின்றன.


தேர்தல் வாக்குறுதியில் இடம் பெற்ற அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும். இவ்வாறு முதல்வர் ரங்கசாமி பேசினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.