Pages

Thursday, June 11, 2015

கல்விக் கடன் வழங்க அலைக்கழிக்கும் வங்கிகள்!

மேற்படிப்புக்கான கல்விக் கடன் வழங்குவதில், வங்கிகள் அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பள்ளிப்படிப்பை முடிக்கும் ஏழை, எளிய மாணவர்களின், மேற்படிப்பு கனவு, கல்விக் கடன் வாயிலாக, நிறைவேறி வருகிறது. பொறியியல், மருத்துவம், வேளாண், கலை மற்றும் அறிவியல் உட்பட துறை சார்ந்த படிப்புகளுக்கு ஏதுவாக, கல்விக் கடன் வழங்கப்படுகிறது. கடந்த, 2013 டிச., 31 நிலவரப்படி, நாடு முழுவதும் 25 லட்சத்து 70 ஆயிரத்து 254 பேரிடம் 57 ஆயிரத்து 700 கோடி ரூபாய் கல்விக் கடன் நிலுவையில் இருந்தது.


லோக்சபா தேர்தலுக்கு முந்தைய இடைக்கால பட்ஜெட்டின்போது, அப்போதைய நிதியமைச்சர் சிதம்பரம், 2009 மார்ச் 31ம் தேதிக்கு முன், கல்விக் கடன் பெற்ற 9 லட்சம் பேர் செலுத்த வேண்டிய வட்டியான, 2,600 கோடியை மத்திய அரசே செலுத்தும் என அறிவித்தார். சிதம்பரத்தின் அறிவிப்பு, 2009ம் ஆண்டுக்கு முன் கல்விக் கடன் வாங்கியவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், அவர் அறிவித்தது போல், வங்கிகளுக்கு குறைந்த அளவிலான வட்டி மானியமே வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள வட்டியை, கடன் வாங்கியவர்களிடம், வங்கிகள் வசூலிக்கத் துவங்கின.

வட்டித் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது குறித்து கேள்வி எழுப்பினால், முறையான அறிவிப்பு எங்களுக்கு வரவில்லை என்றே, வங்கி அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். தற்போது, மாதந்தோறும் லோக் அதாலத் நடத்தப்படுவதால், வங்கிகள் மற்றும் கல்விக் கடன் வாங்கியவர்கள் இடையே பேச்சு நடத்தப்பட்டு, குறிப்பிட்ட தொகை செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு, அதற்கு காலக்கெடு விதிக்கப்படுகிறது. இதைப் பயன்படுத்தியவர்கள், வங்கிக் கடனை செலுத்தி வருகின்றனர்.

வட்டி தள்ளுபடி அறிவிப்பு வரும் என காத்திருந்து கடனை செலுத்தாதவர்களால், தற்போது, பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரிக்கு சென்றுள்ள பலர், கல்விக் கடன் கிடைக்காமல் அலைக்கழிக்கப்படுகின்றனர்.’எங்களது வங்கியில், வட்டி சதவீதம் அதிகமாக இருக்கும்; வேறு வங்கியை நாடுங்கள். நாங்களே அந்த வங்கிக்கு பரிந்துரைக்கிறோம்’ என, தெரிவிப்பதால், ஏழை, எளிய மாணவர்களின் மேற்படிப்பு கேள்விக்குறியாக உள்ளது.

மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், ”தகுதியான மாணவர்களுக்கு, கல்விக் கடன் வழங்க மறுத்தால், அந்த வங்கியின் மண்டல அலுவலரிடம் தெரிவிக்கலாம். குறைதீர் கூட்டத்தில், மாவட்ட கலெக்டரிடமும் புகார் தெரிவிக்கலாம். கலெக்டரிடம் வழங்கப்படும் கடிதம் எங்களுக்கு வந்தவுடன், உரிய நடவடிக்கை எடுப்போம். தகுதியுள்ளவர்களுக்கு கல்விக்கடன் மறுத்தால், அது ஏற்கத்தக்கதல்ல,” என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.