கிருஷ்ணகிரியில் பிளஸ் 2 தேர்வில் பொருளாதாரப் பாடத்தில் 24 மதிப்பெண்கள் பெற்று தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்ட மாணவிக்கு விடைத்தாள் நகல் வழங்குவதில் குளறுபடி ஏற்பட்ட நிலையில், அவர் 123 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றதாக புதன்கிழமை அறிவிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி பாரதி நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. தொழிலாளி. இவரது மகள் கவிதாமணி. கிருஷ்ணகிரியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ் 2 கணக்குப்பதிவியல் பாடப் பிரிவில் பயின்று வந்த அவர், பொதுத் தேர்வை எழுதினார்.
கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட தேர்வு முடிவில் அவர் மொத்தம் 584 மதிப்பெண்கள் பெற்றதாகவும், பொருளாதாரப் பாடத்தில் 200-க்கும் 24 மதிப்பெண்கள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்ததாக மதிப்பெண் பட்டியலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, கவிதாமணி தனது விடைத்தாள் நகலை உரிய முறையில் பெற்றுப் பார்த்த போது, விடைத்தாள் நகலின் முன்பகுதியில் கவிதாமணியின் பெயர், பதிவு எண் இருந்தது. ஆனால், அவர் எழுதிய விடைத்தாளுக்குப் பதிலாக மற்றொருவரின் விடைத்தாள் இணைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து, கிருஷ்ணகிரி முதன்மைக் கல்வி அலுவலகத்தை அவர் தொடர்பு கொண்ட போது, விடைத்தாள் வேலூர் மாவட்டம், ஆம்பூரில் திருத்தப்பட்டதும், அப்போது தவறு ஏற்பட்டதும் தெரியவந்தது.
மேலும், 10 நாள்களில் உரிய விடைத்தாள் நகல் வழங்க நடவடிக்கை எடுப்பதாக கல்வித் துறை அலுவலர்கள் உறுதியளித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.
இதனால், பாதிக்கப்பட்ட மாணவி எந்தக் கல்லூரியிலும் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதுகுறித்து செய்தி வெளியான நிலையில், பொருளாதாரப் பாடத்தில் கவிதாமணி 123 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றதாக கல்வித் துறையினர் அறிவித்ததாக அவரது தந்தை சுப்பிரமணி தெரிவித்தார்.
மேலும், மாணவி கவிதாமணி பொருளாதாரப் பாடத்தில் 123 மதிப்பெண்கள் பெற்றுள்ளதை கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.