Pages

Friday, June 5, 2015

சட்டப் படிப்பு: இன்று முதல் விண்ணப்ப விநியோகம்: 3 ஆண்டு பி.எல். படிப்புக்கு வயது உச்ச வரம்பு நீக்கம்

ஒருங்கிணைந்த ஐந்தாண்டு, மூன்றாண்டு சட்டப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் வெள்ளிக்கிழமை (ஜூன் 5) தொடங்குகிறது என்று தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.


சட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் மே 8-ஆம் தேதி முதல் விநியோகிக்கப்படும் என்று பல்கலைக்கழகம் முன்னர் அறிவித்திருந்தது. ஆனால், அதன்படி விநியோகிக்கப்படவில்லை.

படிப்புக்கான வயது உச்ச வரம்பு தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவு, சட்டப் படிப்புகளைக் கட்டுப்படுத்தி வரும் இந்திய பார் கவுன்சிலின் நடைமுறை ஆகியவற்றின் அடிப்படையில், தமிழகத்திலும் சட்டப் படிப்புகளுக்கான வயது உச்ச வரம்பை நீக்குவது குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வந்தனர். இதன் காரணமாகவே விண்ணப்ப விநியோகம் தடைபட்டதாக பல்கலைக்கழக நிர்வாகிகள் தெரிவித்திருந்தனர்.


இந்த நிலையில் வயது உச்ச வரம்பை நீக்குவதற்கு தமிழக அரசின் அனுமதி கிடைத்ததைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமை முதல் விண்ணப்ப விநியோகத்தைத் தொடங்க சட்டப் பல்கைலக்கழகம் முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பு:

பல்கலைக்கழக ஆற்றல்சார் பள்ளியில் வழங்கப்படும் ஒருங்கிணைந்த ஐந்தாண்டு ஹானர்ஸ் சட்டப் படிப்புகள், மூன்றாண்டு ஹானர்ஸ் சட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் ஜூன் 5-ஆம் தேதி முதல் விநியோகிக்கப்பட உள்ளன.

பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் எம்.எல்., முதுநிலை சட்ட பட்டயப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் ஜூன் 8-ஆம் தேதி முதல் விநியோகிக்கப்படும்.

அரசு சட்டக் கல்லூரிகளில் வழங்கப்படும் ஐந்தாண்டு படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் ஜூன் 8-ஆம் தேதி தொடங்கப்படும். மூன்றாண்டு சட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் ஜூன் 12-ஆம் தேதி முதல் விநியோகிக்கப்படும்.

 கட்டுப்பாடு நீக்கம்: தமிழக அரசின் உத்தரவு அடிப்படையில் மூன்றாண்டு சட்டப் படிப்புகளில் சேருவதற்கான வயது உச்ச வரம்பு நீக்கப்பட்டுள்ளது. இந்தப் படிப்பில் சேர அதிகபட்ச வயது 30 என்று முன்னர் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இதேபோல ஐந்தாண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளுக்கான வயது உச்ச வரம்பு 20-லிருந்து 21-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது ஓராண்டு மட்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.