தமிழகத்தில் கடந்த 3 நாள்களாக நடைபெற்று வரும் எம்.பி.பி.எஸ் கலந்தாய்வில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர இதுவரை மொத்தம் 1,119 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் உள்ள 20 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1,396 எம்.பி.பி.எஸ். காலியிடங்களை நிரப்ப தொடர்ந்து வருகிற 25-ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறுகிறது.
சுயநிதி அரசு எம்.பி.பி.எஸ்.: தமிழகத்தில் செயல்பட்டு வரும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் சமர்ப்பித்துள்ள 597 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு மாணவர்களைத் தேர்வு செய்யவும் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. கடந்த 2 நாள்களில் மொத்தம் 30 மாணவர்கள் சுயநிதி அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களைத் தேர்வு செய்துள்ளனர். சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 567 எம்.பி.பி.எஸ். காலியிடங்கள் உள்ளன.
உயர் நீதிமன்ற வழக்கு: கடந்த ஆண்டு பிளஸ் 2 முடித்த மாணவர்களை எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்க்க எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆண்டு பிளஸ் 2 முடித்த மாணவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் விசாரணை திங்கள்கிழமை தொடங்கவுள்ளது. இதனால் எம்.பி.பி.எஸ். கலந்தாய்வில் இதுவரை தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவர் எவருக்கும் சேர்க்கைக்கான கடிதம் வழங்கப்படவில்லை.
மேலும் 8 கல்லூரிகளில்... சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அரங்கில் பொதுப் பிரிவினருக்கான எம்.பி.பி.எஸ். கலநதாய்வு ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கியது.
கலந்தாய்வுக்கு மொத்தம் 588 மாணவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். கலந்தாய்வில் 580 மாணவர்கள் பங்கேற்றனர். 8 மாணவர்கள் மட்டுமே கலந்தாய்வில் பங்கேற்கவில்லை. கடந்த 2 நாள்களில் மொத்தம் 16 மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்கவில்லை.
197.50 கட்-ஆஃப் மதிப்பெண்ணுடன்...: அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர 546 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். சுயநிதி மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களில் சேர 29 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அனைத்துப் பிரிவு மாணவர்களுக்கு 198.25 கட்-ஆஃப் மதிப்பெண்ணுடன் ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கி, 197.50 கட்-ஆஃப் மதிப்பெண்ணுடன் முடிவடைந்தது.
இன்று தொடர்ந்து கலந்தாய்வு: சென்னை மருத்துவக் கல்லூரி, அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியைப் போன்று, சென்னை ஓமந்தூரார், மதுரை, தஞ்சாவூர், செங்கல்பட்டு, திருநெல்வேலி, கோவை, சேலம், திருச்சி ஆகிய 8 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் அனைத்துப் பிரிவினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உரிய எம்.பி.பி.எஸ். இடங்களையும் மாணவர்கள் தேர்வு செய்துவிட்டனர். அனைத்துப் பிரிவு மாணவர்களைத் தேர்வு செய்ய தொடர்ந்து எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு திங்கள்கிழமையும் நடைபெறுகிறது.
161 பழைய மாணவர்களுக்கு வாய்ப்பு
தமிழகத்தில் கடந்த 3 நாள்களாக நடைபெற்று வரும் எம்.பி.பி.எஸ். கலந்தாய்வில் கடந்த ஆண்டுகளில் பிளஸ் 2 முடித்த 161 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழு உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருவதால் யாருக்கும் சேர்க்கைக் கடிதம் வழங்கப்படவில்லை என்றும் அதிகாரிகள் கூறினர்.
548 பழைய மாணவர்களுக்கு வாய்ப்பு: நிகழ் கல்வி ஆண்டில் (2015-16) எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர கடந்த ஆண்டுகளில் பிளஸ் 2 முடித்த 4,679 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர 548 பேருக்கு வாய்ப்பு உள்ளதாக மருத்துவக் கல்வி தேர்வுக் குழு மதிப்பிட்டுள்ளது. கடந்த 3 நாள்களாக நடைபெற்ற கலந்தாய்வில், கடந்த ஆண்டுகளில் பிளஸ் 2 முடித்த 161 மாணவர்கள் தேர்வாகியுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த ஜூன் 19-ஆம் தேதி சிறப்பு பிரிவினருக்கான எம்.பி.பி.எஸ். கலந்தாய்வில், மாற்றுத் திறனாளிகள் பிரிவிலும் முந்தைய ஆண்டுகளில் பிளஸ் 2 முடித்த சில மாணவர்கள் தேர்வாகியுள்ளனர். எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு திங்கள்கிழமை முதல் ஜூன் 25-ஆம் தேதி வரை தொடர்ந்து நடைபெறுவதால், முந்தைய ஆண்டுகளில் பிளஸ் 2 முடித்த மீதமுள்ள 387 மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேரும் வகையில் தேர்வாக வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.