இந்த மாத இறுதிக்குள் சத்துணவு காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என சமூக நலத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. தமிழகம் முழுவதும் உள்ள 32 மாவட்டங்களில், 42 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சத்துணவு மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவதற்காக, 42,423 சத்துணவுப் அமைப்பாளர்கள்,42,855 சமையல் உதவியாளர்கள், 42,855 சமையலர்கள் உள்பட மொத்தம் ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 132 பணியிடங்கள் உள்ளன.தற்போதைய நிலவரப்படி, சத்துணவுப் அமைப்பாளர்கள் 33,136 பேரும், சமையல் உதவியாளர்கள் 33,772 பேரும், சமையலர்கள் 30,297 பேரும் பணிபுரிந்து வருகின்றனர். இதில் 30,925 பணியிடங்கள் காலியாக உள்ளன.
கோரிக்கை:
அண்மையில், சத்துணவு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். அப்போது காலிப் பணியிடங்களை நிரப்புமாறும் வலியுறுத்தப்பட்டது. அரசுடன் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து, காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.பள்ளி திறப்பதற்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவதில் தடை ஏற்படாமல் இருக்க சத்துணவுப் பணியாளர்கள் விரைவில் பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
காலிப் பணியிடங்கள்:
9,287 சத்துணவு அமைப்பாளர்கள், 9,083 சமையல் உதவியாளர்கள், 12,555 சமையலர்களின் பணியிடங்கள் என மொத்தம் 30,925 பணியிடங்கள் தற்போது காலியாக உள்ளன.மாவட்ட ஆட்சியர் அலுவலக அறிவுறுத்தலின்படி, வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், இதற்கான விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்படுகின்றன. விண்ணப்பிப்பவர்களில் தகுதியானவர்கள் 1:5 என்ற விகிதத்தில் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு தேர்வு செய்யப்படுவர்.தகுதி, வயது, இனச் சுழற்சி முறை உள்ளிட்ட வழக்கமான நடைமுறைப்படி, சத்துணவுப் அமைப்பாளர், சமையல் உதவியாளர் பணி நியமனங்கள் இருக்கும். இம்மாதம் இறுதிக்குள் அனைத்து காலிப் பணியிடங்களையும் நிரப்பி விடுவோம் என்றனர்.
சமையலர் நியமனம் எப்போது?
தமிழகம் முழுவதும் உள்ள சமையல் உதவியாளர், சத்துணவு அமைப்பாளர்கள் காலிப் பணியிடங்கள் தற்போது நிரப்பப்பட்டு வருகின்றன. எனினும், சமையலர்கள் நியமனத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தடை ஆணை உள்ளதால் அந்த் காலிப் பணியிடங்களை நிரப்பும் பணி தாமதமாகும்.பெரம்பலூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மட்டும் சத்துணவுப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, திண்டுக்கல், திருப்பூர், திருநெல்வேலி, சேலம், திருச்சி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் உள்ளன. இதன்படி, மீதமுள்ள மாவட்டங்களிலும் சத்துணவுப் பணியாளர்கள் இம்மாத இறுதிக்குள் பணி அமர்த்தப்படுவார்கள்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.