''முடிவுகள் எடுப்பதில், அரசு ஊழியர்கள் அச்சமின்றி செயல்பட வேண்டும்; அரசின் கொள்கைகளைப் புரிந்து கொள்ள வேண்டும்; அதேநேரத்தில், அரசியல் ரீதியான விஷயங்களில் இருந்து ஒதுங்கி இருக்க வேண்டும்,'' என, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, யோசனை தெரிவித்து உள்ளார்.டில்லியில் உள்ள, இந்திய பொது நிர்வாக நிறுவனத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி பேசியதாவது:
கடந்த பல ஆண்டுகளில், நாட்டின் பொருளாதாரத்திலும், சமுதாயத்திலும் பெரிய அளவில் மாற்றங்கள் நிகழ்ந்து உள்ளன; எனவே, அரசு ஊழியர்கள் அச்சமின்றி பணியாற்ற வேண்டும். அத்துடன், நம்பகத்தன்மையுடன் செயல்படுவதோடு, தங்களுடைய அணியினரையும், அரவணைத்துச் செல்லும் திறமையைப் பெற்றிருக்க வேண்டும். பார்லிமென்டரி ஜனநாயகத்தில் அரசின் கொள்கைகள் என்ன, அவற்றை எப்படி செயல்படுத்த வேண்டும் என்பதை அறிந்திருப்பதோடு, அரசியல் ரீதியான விஷயங்களில் இருந்து ஒதுங்கி இருக்க வேண்டும். மாறியுள்ள சூழ்நிலைகளுக்கு ஏற்ற வகையில், தங்களின் பணியைச் செய்ய வேண்டும்.
இன்றைய நாளில், உலகம் முழுவதும் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. நாடுகள், ஒன்றையொன்று ஒருங்கிணைந்து செயல்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. அதற்கேற்ற வகையில், அரசு அதிகாரிகள் தங்களின் கடமையைச் செய்ய வேண்டியது அவசியம். அமைச்சர்களை போல, மக்களை கவரும் விஷயங்களில், அதிகாரிகள் ஈடுபடாமல், அரசு நிர்வாகத்திற்கும், மக்களுக்கும் இடையே, நடுநிலைமையோடும், உயரிய நேர்மையோடும் செயல்பட வேண்டும். தங்களின் மனதில் உள்ளதை அச்சமின்றி, தெளிவாக தெரிவிப்பதோடு, மாற்று கருத்துகள் இருந்தாலும், அதையும் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு, ஜெட்லி கூறினார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.