Pages

Friday, May 1, 2015

ஆய்வக உதவியாளர் தேர்வை கல்வித்துறை நடத்த எதிர்ப்பு :டி.என்.பி.எஸ்.சி.,க்கு மாற்ற கோரிக்கை

பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு, கல்வித்துறை நேரடியாக தேர்வு நடத்தாமல், டி.என்.பி.எஸ்.சி., மூலம் நடத்த கோரிக்கை எழுந்துள்ளது. அவசர, அவசரமாக தேர்வை அறிவித்து, குறுகிய காலத்தில் நடத்துவது சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. அரசுப்பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு, 4,362 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். தேர்வு மே, 31ம் தேதி நடத்தப்படுகிறது.இதற்கான அறிவிப்பு ஏப்., 22ம் தேதி வெளியானது. பின், இரண்டு நாட்களில் ஏப்., 24ம் தேதி முதல் விண்ணப்பிக்கும் பணி அவசர, அவசரமாகத் துவங்கி, மே, 6ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக மாவட்ட வாரியாக, இரண்டு முதல், நான்கு சேவை மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த போட்டித் தேர்வை, கடந்த, 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, கல்வித்துறையின் தேர்வுத்துறைப்பிரிவு நடத்துகிறது. ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., போன்ற, பணி நியமன அமைப்புகளை போல், விண்ணப்பிக்க போதிய அவகாசம் அளிக்கப்படவில்லை. மேலும், தனியாக ஆன்-லைனில் விண்ணப்பிக்கும் வசதி வழங்காமல், சேவை மையங்களை அவசரமாக அமைத்து, அனைத்து சான்றிதழ்களையும் கொண்டு வரச் செய்து, குளறுபடியான விண்ணப்ப முறை ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதனால், ஆசிரியர்கள், கல்வித்துறையினர், வேலைவாய்ப்புத் துறை நிபுணர்கள் இந்த தேர்வின் மீது சந்தேகம் அடைந்துள்ளனர்.
*ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் காலியிடங்கள் இருந்தாலும், அதை இவ்வளவு அவசரமாக நடத்த வேண்டுமா?
*டி.ஆர்.பி., மற்றும் டி.என்.பி.எஸ்.சி., போல அறிவிப்பாணை வெளியான தேதியில் இருந்து, குறைந்தது, இரு மாதங்கள் கூட அவகாசம் வழங்காமல், 40 நாட்களில் தேர்வு நடத்த வேண்டுமா? 
*கல்வித்துறையின் தேவைக்கு, கல்வித்துறையே நேரடியாக தேர்வு நடத்துவதால், நியாயமான தேர்வு மற்றும் பணி நியமனம் சாத்தியமா?
*பணி நியமனத்துக்காக உருவாக்கப்பட்ட டி.என்.பி.எஸ்.சி.,யை விட்டு, விட்டு, தாமாக தேர்வு நடத்தினால், மற்ற துறைகளும் அதேபோன்ற தேர்வு முறையை நடத்தும் வாய்ப்பு ஏற்படும்.
*தேர்வு முறையில் அரசியல், ஆட்சியாளர் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்துக்கு அதிக வாய்ப்புகள் உருவாகும்.
*உண்மையாக வேலைவாய்ப்புக்கு காத்திருப்போர் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதே? 
இப்படிப்பட்ட பல சந்தேகங்கள், கல்வித்துறையினர் மத்தியில் எழுந்துள்ளது.
இதுகுறித்து கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறும்போது, ''அரசுத் துறை பணிகளில், தேர்வு செய்வதற்கு டி.என்.பி.எஸ்.சி., என்ற அமைப்பு உள்ளது. இந்த அமைப்பு பல நிபந்தனைகளை பின்பற்றி, ஆட்களை தேர்வு செய்யும். ஆனால், பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு, கல்வித்துறை தாங்களாகவே தேர்வு நடத்த வேண்டிய அவசியம் இல்லை. இதுவரை இல்லாத வகையில், இத்தேர்வை, அரசுத் தேர்வுத்துறை நேரடியாக நடத்துவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது,''என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.