Pages

Monday, April 6, 2015

பாட புத்தகங்களை எங்கே வாங்குவது? தெளிவான அறிவிப்பின்றி மாணவர்கள் குழப்பம்

தமிழக அரசின் பாடப் புத்தகங்களை, எங்கே வாங்கலாம் என்பது குறித்த தெளிவான அறிவிப்பு இல்லாததால், அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் குழப்பம் அடைந்து உள்ளனர். தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, அரசின் சார்பில், விலையில்லா பாடப் புத்தகங்கள் வழங்கப்படுகின்றன;
இவை, பள்ளிகள் திறந்து ஒரு மாதத்துக்குப் பிறகே கிடைப்பதால், மாணவ, மாணவியர் ஒரு மாதம், தாமதமாகவே புத்தகங்களை வைத்து வீட்டில் படிக்க முடிந்தது. இந்த சிக்கல்களை தவிர்க்க, பள்ளிக்கல்வித் துறை முயற்சி மேற்கொண்டுள்ளது.
புத்தகம் வழங்கவில்லை:
தற்போது தேர்வுகள் முடியும் நிலையில், பாடப் புத்தகங்களை பள்ளிகளுக்கு வினியோகம் செய்து, பள்ளிகள் திறந்ததும் தாமதமின்றி வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது. சென்னை தரமணியில் உள்ள பாடப் புத்தகக் கிடங்கிலிருந்து, மாவட்ட வாரியாக அனுப்பப்படுகின்றன. இந்நிலையில், தற்போது பல்வேறு அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில், பிளஸ் 1 முடித்துள்ள மாணவர்களுக்கு, பிளஸ் 2 கோடை விடுமுறை வகுப்புகள் துவங்கி உள்ளன. இதே போல், பிளஸ் 1 மாணவர்கள் தனியார், டியூஷன் வகுப்புகளுக்கும் செல்கின்றனர்; புத்தகங்கள் கிடைக்காததால், வீடுகளில் வந்து படிக்க திணறுகின்றனர்.
இதுகுறித்து, தனியார் பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது: அரசுப் பள்ளி பிளஸ் 2 மாணவர்களுக்கு, இம்மாத இறுதியில் புத்தகம் வழங்கப்பட உள்ளது; தனியார் பள்ளிகளுக்கு இன்னும் புத்தகம் வழங்கவில்லை; அதனால், பிளஸ் 2 பாடங்களுக்கு, முன் தயாரிப்பில் ஈடுபடும் மாணவர்கள், புத்தகங்களை எங்கே வாங்குவது என, குழப்பத்தில் உள்ளனர்.
இணையதளம்:
மாவட்டக் கல்வி அலுவலகங்களில் விசாரித்தாலும், 'இன்னும் சுற்றறிக்கை வரவில்லை; வந்ததும் தகவல் தருகிறோம்' என்கின்றனர். மேலும் வெளியே கடைகளிலும் புத்தகங்கள் கிடைக்கவில்லை. இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து, தமிழ்நாடு பாடநூல் கழக அதிகாரி கள் கூறியதாவது: பாடப் புத்தகங்கள், அரசுப் பள்ளிகளுக்கு மட்டும் வினியோகிக்கப்படுகின்றன; தனியார் பள்ளிகளுக்கு, அந்தந்த மண்டல அலுவலகங்கள் மூலம், பின் வினியோகம் செய்யப்படும். பள்ளிகளில் புத்தகங்கள் கிடைக்காதோர், மாவட்டங்களில் உள்ள மண்டல அலுவலகங்கள் மற்றும் சென்னை, டி.பி.ஐ., வளாகத்திலுள்ள பாடநூல் கழக விற்பனை மையத்திலும், பணம் செலுத்தி பெறலாம். மண்டல அலுவலகங்களின் முகவரியை, பாடநூல் கழக இணைய தளம் மற்றும் மாவட்ட கல்வி அலுவலகங்களில் பெறலாம். இவ்வாறு, அதிகாரிகள் கூறினர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.