Pages

Monday, April 6, 2015

பாதுகாப்பு முன்வைப்புத் தொகையை திருப்பித்தராத கல்லூரிகளின் பட்டியலை சேகரிக்க முடிவு

மாணவர் சேர்க்கையின்போது பெறப்படும் பாதுகாப்பு முன்வைப்புத் தொகையை, படிப்பு முடிந்ததும் திருப்பித் தராத கல்லூரிகளின் பட்டியலை சேகரிக்க, உயர் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.


பலவித கட்டணங்கள்

தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளில், கல்விக் கட்டணம், பயிற்சிக் கட்டணம் உட்பட, பலவிதமான கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. பள்ளிகளைப் பொறுத்தவரை, உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, ஓய்வுபெற்ற நீதிபதி சிங்காரவேலர் தலைமையிலான கமிட்டி, கட்டணங்களை நிர்ணயித்துள்ளது.

இதனால், தனியார் பள்ளிகள், மாணவர்களிடமிருந்து வசூலிக்கும் தொகை, ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நிர்ணயித்த கட்டணத்தைவிட அதிகம் பெற்றதாக, பள்ளிகள் மீது வந்த புகாரில், ஏழு கோடி ரூபாயை, தனியார் பள்ளிகளிடம் இருந்து வசூலிக்க, பள்ளிக் கல்வித் துறைக்கு, சிங்காரவேலர் கமிட்டி சமீபத்தில் உத்தரவிட்டது.

இந்நிலையில், மாணவர் சேர்க்கையின்போது, கல்லூரிகளில் கூடுதலாக 5,000 ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை, பாதுகாப்பு முன் வைப்புத் தொகை வசூலிக்கப்படுகிறது. மாணவர்களின் படிப்பு முடிந்ததும், இந்தத் தொகையை திருப்பித்தர வேண்டும்.

ஆனால், பெரும்பாலான கல்லூரிகள் திருப்பித் தருவதில்லை என உயர் கல்வித்துறைக்கு புகார்கள் வந்துள்ளன. இதுதொடர்பாக, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்த சென்னையை சேர்ந்த மாணவி, தமிழக உயர் கல்வித்துறைக்கு புகார் அனுப்பியுள்ளார்.

பட்டியல் தயாரிக்க முடிவு

இதுபற்றி, உயர் கல்வித்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். சென்னை அண்ணா பல்கலை மற்றும் சென்னை பல்கலை மூலம் பாதுகாப்புத் தொகையை திருப்பித் தராத தனியார் கல்லூரிகள் பட்டியல் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பட்டியல் தயாரானதும், சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி, விளக்கம் கேட்க திட்டமிட்டுள்ளதாக, உயர் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.