சத்துணவு ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டத்தால், பள்ளிகளில், 300 ரூபாய், தினக்கூலி அடிப்படையில், சமையலர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்; இதனால், சமையல் தொழிலாளர்களுக்கு, திடீர் கிராக்கி ஏற்பட்டுள்ளது. வேலை நிறுத்தம்:தமிழகம் முழுவதும், அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு, சத்துணவு வழங்கும் பணியில், சமையலர், சமையல் உதவியாளர் என, 90 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர்.
இவர்கள், சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். இதை அரசு நிறைவேற்றாததால், நேற்று முன்தினம் முதல், காலவரையற்ற வேலைநிறுத்தத்தை துவக்கி உள்ளனர்.நேற்று பல இடங்களிலும், உண்ணாவிரத போராட்டம் நடத்திய சத்துணவு ஊழியர்கள், இன்று மறியல் போராட்டம் நடத்த உள்ளனர்.இதனால் ஏற்படும் பாதிப்பை தடுக்க, கல்வித் துறை மூலம், பல்வேறு நடவடிக்கையை, அரசு எடுத்து வருகிறது.
திருச்சி மாவட்டத்தில், 1,548 மையங்களில், 3,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வந்தனர். இவர்களில், விடுப்பு எடுத்தவர்களாலும், போராட்டத்தில் பங்கேற்றுள்ளவர்களாலும், பல மையங்களில், சமையலர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.தட்டுப்பாடு:இதை சமாளிக்க, தினக்கூலிக்கு ஆட்களை நியமித்துள்ளனர். இதனால், வெளியிடங்களில், சமையல் ஆட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:அரசு பள்ளிகளில், வரும் 22ம் தேதியுடன், முழு ஆண்டு தேர்வு முடிகிறது. அதுவரை, சமையல்காரர்கள், உதவியாளர்களை, 300 ரூபாய் தினக்கூலி அடிப்படையில், பணியில் அமர்த்தி, உணவு சமைத்து மாணவர்களுக்கு வழங்குகிறோம்.தற்காலிக சமையலர்களுக்கு வழங்கும் கூலியை, யார் வழங்குவது, எப்படி திரும்பப் பெறுவது என, தெரியவில்லை.இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.