இலவச பாடப்புத்தகங்கள் தேவையான அளவுக்கு இருப்பு இல்லாததால்,ஆசிரியர்கள் பாடநுால் கிடங்குகள் மற்றும் பள்ளிகளுக்கு மாறி, மாறி அலைக்கழிக்கப்படுகின்றனர். இதனால், புத்தகம் எடுத்து வருவதில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.
கல்வி ஆண்டு:
ஆண்டுதோறும், புதிய கல்வி ஆண்டில், பள்ளி கள் திறந்து, ஒரு மாதத்துக்கு பின் புத்தகங்கள் வினியோகம் செய்யப்படும். இதனால், மாணவ, மாணவியர் புத்தகங்கள் இல்லாமல், ஒரு மாதம் வரை, வீட்டில் படிக்க முடியாத சூழல் ஏற்படும். இதை மாற்ற, இந்த ஆண்டு முதல், பள்ளிகள் திறக்கும் முதல் நாளிலேயே புத்தகங்களை வழங்க, பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்து உள்ளது.அதனால், தமிழ்நாடு பாடநுால் கழக பாடப்புத்தகங்கள் தனியார் மூலம், சிவகாசியில் அச்சடிக்கப்பட்டு, தேர்வுகள் நடக்கும் போதே தயாராகி விட்டன. உத்தரவு:முதற்கட்டமாக, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படிக்கும்மாணவ, மாணவியருக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. மற்ற வகுப்புக்கான புத்தகங்களை பள்ளிகளில் வாங்கி வைக்குமாறு, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் பாடநுால் கழக மண்டல அலுவலகங்களுக்கு சென்று, ஆட்டோ அல்லது வேன்களில் புத்தக கட்டுகளை கொண்டு வர, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.வரவில்லை:ஆனால், ஆசிரியர்கள் மண்டல அலுவலகங்களுக்கு செல்லும் போது, அனைத்து புத்தகங்களும் வழங்காமல், ஒரு சில பாட புத்தகங்களை மட்டும் வினியோகம் செய்கின்றனர். சில பாட புத்தகங்கள், 'ஸ்டாக்' இல்லை; சிவகாசியில் இருந்து வரவில்லை என, பாடநுால் கழக அதிகாரிகள் கூறுவதால், ஆசிரியர்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர்.மேலும் ஆசிரியர்களே புத்தகக் கட்டுகளை சுமந்து வரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதனால், புத்தகம் எடுக்கும் பணிக்கு செல்ல ஆசிரியர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.
இதுகுறித்து, தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக நிறுவனத் தலைவர் மாயவன் கூறியதாவது:விலையில்லா சைக்கிள், ஜியோமெட்ரிக் பாக்ஸ், கிரயான்ஸ், காலணிகள் போன்றவை, பள்ளிகளுக்கே வினியோகம் செய்யப்படுகின்றன. ஆனால், புத்தகங்களை மட்டும் புத்தக கிடங்குகளுக்கு சென்று கொண்டு வர உத்தரவிடுகின்றனர். இதனால், தேர்வுப் பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன. அலைக்கழிப்பு:ஆசிரியர்கள் செல்லும்போது கிடங்குகளில் புத்தகங்கள் இருப்பு இல்லை என்று கூறி, ஒவ்வொரு பாடப்புத்தகத்துக்கு ஒவ்வொரு முறை வரச்சொல்லி அலைக்கழிக்கின்றனர். எனவே, பாடப்புத்தகங்களையும் பள்ளிகளுக்கு கொண்டு வந்து வினியோகம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.