Pages

Friday, April 17, 2015

25% இடஒதுக்கீடு: தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன்: இளங்கோவன்

தமிழகத்தில் 25% இடஒதுக்கீட்டு திட்டத்தை செயல்படுத்தாத தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க அரசு தயக்கம் காட்டுவது ஏன்? என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் கேள்வி எழுப்பியுள்ளார்.


தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அறிக்கையில், கடந்த மத்திய காங்கிரஸ் அரசு 6 முதல் 14 வயது நிரம்பிய அனைவருக்கும் கட்டாய கல்வி கொடுக்கும் வகையில் கல்வி உரிமைச்சட்டம் கொண்டு வந்தது. இச்சட்டத்தின்படி அனைத்து தனியார் பள்ளிகளும் ஒவ்வொரு வகுப்பிலும் 25 சதவீத இடங்களில் ஏழைஎளிய மாணவர்களை சேர்க்க வேண்டுமென்று கூறப்பட்டுள்ளது.

இதற்கான கல்வி கட்டணத்தை அரசே செலுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் கல்வி உரிமைச் சட்டத்தின்படி தமிழகத்தின் தனியார் பள்ளிகளில் முறையான மாணவர் சேர்க்கை நடத்தப்படுவதில்லை. அதை தட்டிக் கேட்பதற்கு கல்வித்துறையும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.

இச்சட்டத்தின்படி தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்க பெரும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஆனால் 25 சதவீத இடஒதுக்கீட்டில் மாணவர்களை சேர்த்துக் கொள்ளாமல், தனியார் பள்ளிகள் பல்வேறு சால்ஜாப்புகளை கூறி இழுத்தடித்து வருகின்றன. இதனால் பெற்றோர்கள் எதிர்கொள்கிற வேதனைகளை வார்த்தைகளால் வடிக்க இயலாது. இதுகுறித்து தமிழக அரசு கடுகளவும் கவலைப்படுவதாக தெரியவில்லை.  மத்திய கல்வி சட்டத்தின்படி 25 சதவீத ஒதுக்கீட்டை நிறைவேற்றாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுப்பதிலே தமிழக கல்வித்துறைக்கு என்ன தயக்கம் ? 

கடந்த 2013-14 கல்வியாண்டில் 25 சதவீத ஒதுக்கீட்டின்படி தமிழகத்தில் மொத்த இடங்கள் 1 லட்சத்து 43 ஆயிரம். ஆனால் 16 ஆயிரத்து 194 இடங்கள் தான் நிரப்பப்பட்டிருக்கின்றன. 25 சதவீத ஒதுக்கீடு வழங்க  வேண்டிய தனியார் பள்ளிகள் 8.8 சதவீதம் தான் ஒதுக்கியிருக்கின்றன.

தமிழகத்திலுள்ள 10 ஆயிரத்து 758 தனியார் பள்ளிகளில் 1392 பள்ளிகளில் ஒரே ஒரு மாணவரைத் தான் 25 சதவீத ஒதுக்கீட்டின்படி சேர்த்துள்ள கொடுமை நடந்திருக்கிறது.  ஆனால் தமிழ்நாட்டில் தான் இவ்வளவு குறைவான மாணவர்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். இச்சட்டப்படி பள்ளிகளுக்கு சேர வேண்டிய முழுக் கட்டணத்தை மத்திய அரசுதான் வழங்குகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.