Pages

Tuesday, March 24, 2015

பள்ளி நிர்வாகிகளை தப்பவைக்க முயற்சியா?

பிளஸ் 2 தேர்வில் கணக்கு பாட வினாத்தாளை வாட்ஸ் அப்பில் வெளியிட்ட சம்பவத்தில் ஓசூர் விஜய் வித்யாலயா பள்ளி நிர்வாகிகளை தப்பி  வைக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. பிளஸ்2 பொது தேர்வில் கணக்கு பாட வினாத்தாளை வாட்ஸ் அப் மூலம் வெளியிட்ட  ஓசூர் விஜய் வித்யாலயா பள்ளி ஆசிரியர்கள் மகேந்திரன், கோவிந்தன் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் ஆரம்பத்தில் இருந்தே  கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் நிர்வாகம் பள்ளி நிர்வாகத்திற்கு துணைபுரியும் வகையிலான காரியங்களை செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முறைகேட்டில் ஈடுபட்ட ஆசிரியர்களை ஒப்படைத்த பின்னர் கூட போலீசார் தங்கள் கட்டுப்பாட்டில் வைக்கவில்லை. 

அடுத்த நாள் இந்த விவகாரம் வெளியில் வந்த பின்னர் தான் இரவோடு, இரவாக 4 பேரையும் கைது செய்து  சிறையில் அடைத்தனர்.  விசாரணையில், பள்ளி  நிர்வாகத்தின் நிர்ப்பந்தத்தின் பேரிலேயே தாங்கள் இதில் ஈடுபட்டதாகவும், அவ்வாறு செய்யாவிட்டால் எங்கள் எதிர்காலம் பாதிக்கப்படும் என கைதான  ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் பள்ளி நிர்வாகிகளுக்கு தொடர்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் சம்பவம் நடந்து 5 நாட்களாகியும் இதுவரை  பள்ளி நிர்வாகிகள் அல்லது அப்பள்ளியின் முதல்வரிடம் கூட குற்றப்பிரிவு போலீசார் எந்த விசாரணையும் நடத்தவில்லை. 

இது தொடர்பாக தங்கள் உயர் அதிகாரியிடம் அனுமதி கேட்ட போது, தான் சொல்லும் வரை இந்த விஷயத்தில் மேல் விசாரணை வேண்டாம் என போலீசாரை  முடக்கியதும் தற்போது அம்பலமாகியுள்ளது. பள்ளி நிர்வாகிகள் , அரசியல் மற்றும் உயர் அதிகாரிகள் மட்டத்தில் செல்வாக்கு கொண்டவர்கள் என்பதால்  உள்ளூர் போலீசார் தயங்கி வருவதும் தெரியவந்துள்ளது. மேலும் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க பணம் கைமாறியிருக்கலாம் எனவும் குற்றச்சாட்டு  எழுந்துள்ளது. மேலும் 4 பேரையும் சிறையில் சந்தித்த பள்ளி நிர்வாக பிரதிநிதி ஒருவர், எவ்வளவு செலவானாலும் நிர்வாகமே ஜாமீன் கிடைக்க ஏற்பாடு  செய்யும். எனவே கவலைப்படவேண்டாம் என உறுதியளித்துள்ளதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.