ஓசூரை போலவே, கிருஷ்ணகிரியிலும் பிளஸ்2 தேர்வில் முறைகேடு நடந்துள்ளது தெரியவந்துள்ளது. பிளஸ்2 பொதுத்தேர்வு கடந்த 5ம் தேதி தொடங்கியது. முதல் நாள் தமிழ் முதல் தாளுக்கான தேர்வு நடந்தது. கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் எழுதினர். அன்று ஒரு அறையில் கண்காணிப்பாளராக அரசு பள்ளி ஆசிரியை பணியில் இருந்துள்ளார்.
அந்த அறையில் மொத்தம் 22 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர். அதில் ஒருவர் வரவில்லை. இதையடுத்து அந்த கேள்வி தாளை உடனடியாக அதே பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் பணியாற்றி வரும் ஒரு ஆசிரியையிடம் வழங்கி, அந்த கேள்வி தாளை ஜெராக்ஸ் எடுத்து, உடனடியாக கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு தனியார் பள்ளி நிர்வாகத்திடம் சேர்க்கும்படி உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி அவரும் செய்துள்ளார். தேர்வு முடிந்த பின் விடைத்தாள் அனைத்தும், அந்த மையத்தின் பொறுப்பாளராக பணியாற்றிய கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சின்னராஜிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அப்போது தான் தேர்வு எழுத வராதவரின் கேள்வித்தாள் திருப்பி வழங்கப்படாதது தெரியவந்தது. விசாரணையில் அந்த கேள்வித்தாளை, அறை கண்காணிப்பாளராக பணியாற்றிய ஆசிரியை தன்னிடமே வைத்திருந்ததும், அந்த கேள்வித்தாளை ஜெராக்ஸ் எடுத்து தனியார் பள்ளி நிர்வாகத்திற்கு வழங்கியதும் தெரியவந்தது.
இதுகுறித்து மைய பொறுப்பாளர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு தகவல் கொடுத்துள்ளார். அவர் உடனடியாக அங்கு சென்று, அந்த ஆசிரியையிடம் விளக்கம் கடிதம் எழுதி வாங்கி, மன்னித்து அனுப்பியுள்ளார். இது தற்போது வெளியாகியுள்ளது. இதன் பேரில், கிருஷ்ணகிரியில் முகாமிட்டுள்ள அரசு தேர்வுத்துறை இயக்குநர் தேவராஜன் விசாரணை நடத்தி வருகிறார். இதன் முடிவில், அந்த பள்ளி நிர்வாகம் மீதும் நடவடிக்கை பாயும் என தெரிகிறது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.