Pages

Wednesday, February 11, 2015

சத்துணவு மானிய தொகை விடுவிப்பு

தினகரன் செய்தி எதிரொலியாக கடந்த நான்கு மாதமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சத்துணவுக்கான மானிய தொகையை விடுவித்து சமூகநலத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள சத்துணவு மையங்களுக்கு தேவையான உணவு பொருட்களுக்கு மத்திய, மாநில அரசுகள் மானியம் வழங்குகின்றன. சத்துணவு திட்டத்தில் 58 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்பெறுகின்றனர்.
உணவு தயாரிக்க தேவையான அரிசி நுகர்பொருள் வாணிபக்கழகத்திடம் பெறப்படுகிறது. இதுதவிர காய்கறி, விறகு, மசாலா உள்ளிட்ட சமை யல் பொருட்கள் அந்தந்த மைய அமைப்பாளர்கள் மூலம் வாங்கப்படுகின்றன. இதற்காக அரசு, அந்தந்த மாவட்ட நிர்வாகம் மூலம் அமைப்பாளர்களுக்கு மாதம்தோறும் உணவு மானியம் வழங்கி வருகிறது. இந்த மானிய தொகை, சென்னையில் உள்ள சமூகநலத்துறை இயக்குனரகத்தில் இருந்து மாவட்ட நிர்வாகங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
ஆனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், தேனி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் உள்ள மையங்களுக்கு கடந்த அக்டோபர் மாதம் முதல் ஜனவரி வரை உணவுக்கான நிதி வழங்கப்படாமல் அரசு நிறுத்தி வைத்திருந்தது. இதனால் பல மாவட்டங்களில் மாணவர்களுக்கு சத்துணவு வழங்க முடியாமல் அமைப்பாளர்கள் திணறி வந்தனர். அடிக்கடி இதுபோன்ற பிரச்னை நடப்பதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.
இதுகுறித்து கடந்த 1ம் தேதி வெளியான தினகரன் நாளிதழில் ‘‘சத்துணவு மானிய தொகை 4 மாதமாக நிறுத்தம், அமைப்பாளர்கள் புலம்பல்‘‘ என்ற தலைப்பில் விரிவான செய்தி வெளியானது. இதையடுத்து சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் இதுகுறித்து சமூகநலத்துறை இயக்குனரிடம் உரிய விளக்கம் கேட்டார். இந்நிலையில் நான்கு மாதமாக நிறுத்தி வைக்கப்பட்ட உணவு மானியம் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.