Pages

Monday, February 9, 2015

தமிழகத்தில் 2000 அரசு பள்ளிகள் விரைவில் மூடல்? மாணவர் சேர்க்கை சரிவால் புது நெருக்கடி

தமிழகம் முழுவதும், 2000 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், மாணவர்கள் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால், இந்த பள்ளிகள் மூடுவிழாவை நோக்கிச் செல்வதாக, அதிருப்தி தெரிவிக்கின்றனர் ஆசிரியர்கள்.தமிழகம் முழுவதும், 31 ஆயிரத்து 173 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் செயல்படுகின்றன. ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்; 28.4 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர்.
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், கல்வித்தரத்தை உயர்த்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டாலும், ஆண்டு தோறும் மாணவர் சேர்க்கை சரிந்துகொண்டே வருகிறது. பள்ளி மானியக் கோரிக்கை கொள்கை விளக்க குறிப்புகளின்படி, கடந்த 2008--09ல், அரசு ஆரம்பப் பள்ளிகளில், 43.67 லட்சம் மாணவர்கள் படித்தனர். இந்த எண்ணிக்கை, ஆண்டுதோறும் சரிந்து, 2012-13ம் ஆண்டில் 36.58 லட்சமானது. அதேபோன்று, நடுநிலைப்பள்ளிகளில், 50.46 லட்சமாக இருந்த மாணவர்களின் எண்ணிக்கை, தற்போது, 45.3 லட்சமாக குறைந்துள்ளது. கடந்த இரு கல்வியாண்டுகளில், மாணவர் எண்ணிக்கை மேலும் குறைந்துள்ளது.
அதே நேரத்தில், தனியார் பள்ளிகளில் அதிகரித்து வருகிறது. கடந்த, 2008-09ல் 34.5 லட்சமாக இருந்த மாணவர்கள் எண்ணிக்கை, தற்போது 45.4 லட்சமாக அதிகரித்துள்ளது. மாணவர் எண்ணிக்கை குறை வால், கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் ஏறத்தாழ, 1500 அரசு ஆரம்ப மற்றும் நடுநிலைப்பள்ளிகள் மூடப்பட்டன. நடப்பு கல்வியாண்டில், பள்ளிக் கல்வித் துறையால் சேகரிக்கப்பட்ட புள்ளி விபரங்களின்படி, 2000 பள்ளிகளில் 20க்கும் குறைவான மாணவர்கள் மட்டுமே படிப்பதாகவும், 11 ஆயிரம் பள்ளிகளில் இரண்டு ஆசிரியர்களே பணிபுரிந்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனால், படிப்படியாக 2000 பள்ளிகளை, அருகாமையிலுள்ள பள்ளிகளுடன் இணைப்பதற்கான ஆலோசனையில் கல்வி அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.
இதுகுறித்து, இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்க மாநில செயலர் ராபர்ட் கூறியதாவது: அரசு ஆரம்ப, நடுநிலைப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து சரிந்து வருகிறது. ஆக்கப்பூர்வமான மாற்றங்கள், கல்வித்துறையில் அவசியம். மறைமுகமாக, பல்வேறு அரசு பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன. தற்போது சுமார், 2000 பள்ளிகள் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள காரணத்தால், மூடுவிழாவை எதிர்நோக்கியுள்ளன. பள்ளிகளில், மாணவர் சேர்க்கை சரிவதற்கான காரணத்தை ஆராய்ந்து அதனை சரிசெய்யாமல், பள்ளிகளை மூடும் செயல்பாடுகளால், எதிர்காலத்தில், கல்வி முற்றிலும் தனியார் வசம் போகும் நிலை ஏற்படும். இவ்வாறு, ராபர்ட் தெரிவித்தார்.

1 comment:

  1. ARGTA BRTE(genuine) brte association meeting was conducted at dindukkal on 7.2.2015 ,There were 322 brtes participated on this from 27 district in tamilnadu ,our state leader mr Rajikumar dindukkal,state gen secretary mr Vasudevan villupuram .

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.