Pages

Thursday, January 22, 2015

தவறான வார்த்தை..! தடுமாறும் வெற்றி!!

சொன்னாலும் கேட்பதில்லை இளைய மனசு. கோபம், கர்வம், அகங்காரம் கலந்து நம்மை ஆட்டிப் படைக்கிறது. பெரும்பாலும் பிறரைத் தாக்கி, நக்கல் செய்து பேசுவதே பலரின் பழக்கமாக மாறிவரும் இந்நாளில், அந்தப் பேச்சு எப்படி நமது வாழ்வினை முடக்குகிறது என்பதை உணர முடிவதில்லை.


புண்படுத்தும் பேச்சுக்கள்

கச்சேரி சூப்பர்தான், கூட்டம்தான் இல்லை. பார்ட்டி அருமை, வந்த பார்ட்டிகள் எல்லாம் மொக்கை. பேச்சு நன்றாக இருந்தது, கேட்கத்தான் ஆளில்லை. எக்கச்சக்க ஐடெம்ஸ், எதுவும் வாயில வைக்க முடியல.

இப்படி நிறைய பேரின் பேச்சில் ஒரு குத்தல் இருக்கிறது. கேட்கும்போது பலர் சிரிக்கலாம். சம்பந்தப்பட்டவர்கள் கேட்டால் நிச்சயம் மனம் புண்படும் என்பதில் சந்தேகம் இல்லை.

சிலருக்கு தனது பதவி, அதிகாரம் காரணமாக ஏற்படும் ஒரு உடல் விறைப்பு, கடிந்து பேசும் தன்மை என்று எல்லாமே ஞானச் செறுக்கு எனலாம். புறச்சூழலுக்கு அட்ஜஸ்ட் செய்யமுடியாதபோது ஏற்படும் ஒரு சலிப்பு, கவலை, பொறுமையின்மை வார்த்தையாக வெளிப்படும்போது, பல இதயங்கள் நொறுங்கிப் போகின்றன.

‘வலி’ தரும் வார்த்தைகள்

வார்த்தைகள் வலிமை வாய்ந்தவை மட்டுமல்ல, வலி தருவதும்கூட. சில தவறான வார்த்தைகள், கேட்டவுடனேயே இதயத்தை நொறுக்குகிறது. தாமதமாக வரும் ஒரு கல்லூரிப் பெண்ணைப் பார்த்து ‘யாருடன் சுற்றிவிட்டு வருகிறாய்‘ என்றால் போச்சு. ‘யாரை மயக்க இவ்வளவு மேக் அப்?‘ என்ற கேள்வி பல நேரம் ஆறாத காயங்களை உண்டாக்கும்.

பேசினால் வாயாடி என்பர். பேசாவிட்டால் திமிரு என்பார்கள். என்னதான் செய்வது?

கேட்டால் நிறைய கற்கலாம். பேசினால் நமது அறியாமையை வெளிப்படுத்தலாம் என்பார் ஒரு அறிஞர்.

எதற்கெடுத்தாலும் குற்றம், குறை, குத்திக் காட்டுவது பேச்சில் அழகு ஆகாது. பலர் இன்று வார்த்தைகளைப் பிடித்துக்கொண்டு நிற்கும்போது, விட்டுக் கொடுத்தல், மன்னித்து ஏற்றுக்கொள்ளல் மிக மிக அரிதாகிவிட்டது. அவநம்பிக்கையுடன் பேசுவது, நெகடிவ் ஆக பேசுவது சிலரின் வாடிக்கையாக உள்ளது.

எது சிறந்த மனநிலை

சிலர் கண்டிக்கும் பெற்றோர் மனநிலையில், சிலர் அரவணைக்கும் பெற்றோர் மனநிலையில், சிலர் பக்குவ மனநிலையில், சிலர் இயல்பான மனநிலையில், சிலர் குட்டிப் பண்டிதர் மனநிலையில், சிலர் வளைந்து கொடுக்கும் மனநிலையில், சிலர் முரண்டு பிடிக்கும் குழந்தை மனநிலையில் இருந்தும், தமது பேச்சுவார்த்தையினை மேற்கொள்கின்றனர்.

குழம்ப வேண்டாம்... இதில், பக்குவ மனநிலைதான் சிறந்தது.

- டாக்டர்.பால சாண்டில்யன்

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.