சென்னையில் உள்ள கடல்சார் பல்கலைக்கழகத்தில், 31 பேராசிரியர்களின் நியமனத்தை ரத்து செய்தது செல்லாது என, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையை அடுத்த உத்தண்டியில், கடல்சார் பல்கலைக்கழகம் உள்ளது. 2012 - 13ல், பல்கலைக்கழகத்துக்கு, பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள் என, 63 பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வுசெய்ய, விளம்பரம் வெளியிடப்பட்டது. விண்ணப்பங்களை வரவேற்று, பரிசீலனை செய்து, நேர்முகத் தேர்வுக்குப் பின், 33 பேராசிரியர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இவர்களின் தேர்வுக்கு, பல்கலையின் நிர்வாக கவுன்சில் ஒப்புதல் வழங்கியது. இவர்களில் இருவர், பணியில் சேர விரும்பவில்லை. இதையடுத்து, 2013 மார்ச்சில், 19 பேர் பணியில் சேர்ந்தனர். உள்நாட்டில் வேறு இடங்களில் பணியாற்றியவர்களும், வெளிநாடுகளில் பணியாற்றியவர்களும் வேலையை துறந்து விட்டு, கடல்சார் பல்கலையில் சேர முன்வந்தனர்.
இந்நிலையில், தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக வந்த குற்றச்சாட்டுகளை ஆராய, கேப்டன் மோகன் என்பவர் தலைமையில், மத்திய அரசு, ஒரு குழுவை அமைத்தது. இக்குழுவும், தன் அறிக்கையை தாக்கல் செய்தது. மேலும், விரிவான ஆய்வை மேற்கொள்ளவும், பல்கலைக்கழகத்திடம், குழு கேட்டுக் கொண்டது. இதைத்தொடர்ந்து, 31 பேரின் நியமனங்களை, மத்திய அரசு ரத்து செய்தது. இதை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
மனுக்களை விசாரித்த, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் பிறப்பித்த உத்தரவு: தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் கல்வித் தகுதி மற்றும் தகுதிகளை, தேர்வுக் குழுவும், நிர்வாக கவுன்சிலும் கவனத்தில் கொண்டுள்ளன. நேர்முகத் தேர்வுக்குப் பின்னரே, 31 பேரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்பதில் எந்த சர்ச்சையும் இல்லை. கேப்டன் மோகன் குழுவின் பரிந்துரைகள், பல்கலைக்கழகத்தை கட்டுப்படுத்தாது. குழு அமைத்ததே முறையற்றது.
அதன் அறிக்கைக்கு, சட்டப்பூர்வ அங்கீகாரம் இல்லை. மனுதாரர்களின் கல்வித் தகுதி, பிற தகுதிகளை குழு ஆராயவில்லை. தொலைபேசி மூலம் நேர்முகத் தேர்வு நடத்தியதை மோசடி என்றோ, நடைமுறை மீறல் என்றோ கூற முடியாது. நேர்முகத் தேர்வு நடத்த வேண்டும் என்றுதான் கூறப்பட்டுள்ளது. முறைகேடுகள் இல்லாதபோது, அந்த தேர்வை தவறானது எனக் கூற முடியாது.
எனவே, தற்போது பணியில் இருக்கும் பேராசிரியர்கள், தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்க வேண்டும். பணிநீக்கம் செய்யப்பட்டவர்களை, பணிநீக்க நாளில் இருந்து, பணியில் தொடர்வதாக கருத வேண்டும். எனினும், பணியில் இல்லாத நாட்களுக்கு, இவர்களுக்கு சம்பளம் கிடையாது. பணியில் சேர முடியாதவர்கள் கூட, பணியில் சேர அவர்களுக்கு நிர்ணயித்த தேதியில் இருந்து, பணி காலத்தை கணக்கிட்டு கொள்ளலாம். இவ்வாறு, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.