Pages

Wednesday, January 14, 2015

பி.எட்., எம்.எட் வகுப்புகள் 2 வருடமாக உயர்த்தப்பட்டதால் புதிய பாடத்திட்டம் - துணைவேந்தர் விஸ்வநாதன் பேட்டி

பி.எட். மற்றும் எம்.எட். வகுப்புகள் ஒரு வருடத்தில் இருந்து 2 வருடங்களாக உயர்த்தப்பட்டதால் இரு படிப்புக்கும் புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது என்று தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஜி.விஸ்வநாதன் தெரிவித்தார்.

2 வருடமாக உயர்த்தப்பட்டது
கல்வித்தரத்தை உயர்த்துவதில் மத்திய அரசும் தமிழக அரசும் குறிக்கோளாக கொண்டு அதற்கேற்றபடி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. கல்வித்தரத்தை உயர்த்துவதற்கு முதலில் ஆசிரியர்களின் கல்வித்தரம் உயர்த்தப்படவேண்டும் அதற்காக முதலில் ஆசிரியர் பயிற்சியை செம்மைப்படுத்தவேண்டும் என்று மத்திய அரசு திட்டமிட்டது.
அதன்படி பி.எட். படிப்பை ஒரு வருடத்தில் இருந்து, 2 வருடங்களாகவும், எம்.எட். படிப்பை ஒருவருடத்தில் இருந்து 2 வருடங்களாகவும் சமீபத்தில் உயர்த்தி உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமல்ல இந்தியா முழுவதும் அனைத்து கல்வியியல் கல்லூரிகளின் நிர்வாகத்திற்கும் பல்கலைக்கழக மானியக்குழு ஒரு கடிதத்தை அனுப்பி உள்ளது. அதில் உடனடியாக உங்கள் கல்லூரிகளில் பி.எட். மற்றும் எம்.எட். படிப்பை 2 வருடங்களாக உயர்த்துவதை உறுதி செய்யவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.
அதே போல மாநில அரசுகளுக்கும் கடிதம் அனுப்பி, உடனடியாக பி.எட்., எம்.எட். படிப்புகளை அமல்படுத்தவேண்டும் என்று வேண்டுகோள்விடுத்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஜி.விஸ்வநாதன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
புதிய பாடத்திட்டம்
தமிழ்நாட்டில் பி.எட். மற்றும் எம்.எட். படிப்புகள் 2 வருடங்களாக உயர்த்தப்படவேண்டும் என்று பல்கலைக்கழக மானியக்குழு கடிதம் அனுப்பி உள்ளது. இதனால் ஆசிரியர்களின் கல்வி கற்பிக்கும் திறன் அதிகரிக்கும். வருங்கால மாணவ-மாணவிகளும் கல்வி மற்றும் கேள்விகளில் அதிக வளர்ச்சி கொண்டவர்களாக இருப்பார்கள். 2 ஆண்டுகளாக படிப்பை உயர்த்துவதால் அதற்கான புதிய பாடத்திட்டம் தயாராக உள்ளது. ஆனால் சிண்டிகேட் அனுமதி பெறவேண்டும். அதற்கு பிறகுதான் பாடம் எழுதப்படும்.
அடுத்த கல்வி ஆண்டில்....
அடுத்த கல்வி ஆண்டில் (2015-2016) பி.எட். மற்றும் எம்.எட். படிப்புகளில் அமல்படுத்தப்படும். அதனால் மாணவ-மாணவிகள் புதிய பாடப்புத்தகங்கள் படிப்பார்கள்.
இவ்வாறு துணைவேந்தர் ஜி.விஸ்வநாதன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.