போரூரை அடுத்த பரணிபுத்தூர் ஊராட்சியில் அமைந்துள்ள அரசு நடுநிலைப் பள்ளி எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி சேற்றில் தத்தளித்து வருவதால், மாணவர்களின் கல்வித் திறன் பாதிப்படைவதுடன், அவர்களுக்கு நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
சென்னைப் போரூர் அருகே அமைந்துள்ளது பரணிபுத்தூர் ஊராட்சி. காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியத்தைச் சேர்ந்த இந்த ஊராட்சியில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சிகு உள்பட்ட இந்திரா நகர் பகுதியில் அரசு நடுநிலைப் பள்ளி அமைந்துள்ளது.
இதில் ஊராட்சிப் பகுதியைச் சேர்ந்த சுமார் 300 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளி கடந்த 2003ஆம் ஆண்டு தொடக்கப் பள்ளியாக ஆரம்பிக்கப்பட்டு, 2007ஆம் ஆண்டு நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.
பள்ளியின் தரம் உயர்த்தப்பட்டாலும் பள்ளியின் கட்டடம், அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படாமல் பல ஆண்டுகளாக உள்ளது.
பள்ளியைச் சுற்றி மதில் சுவர் வசதி இல்லை. இதனால் நாய்கள், ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் பள்ளி வளாகத்தில் தஞ்சம் அடைந்து மாணவர்களுக்கு இன்னல்களை ஏற்படுத்தி வருகின்றன.
மழைக் காலங்களில் மழை நீருடன், கழிவு நீர் தேங்கி சேறும் சகதியுமாக பள்ளி வளாகம் காட்சியளிக்கிறது. இதனால் இங்கு பயிலும் மாணவர்களுக்கு தொற்று நோய் பரவும் காத்திருக்கிறது.
மேலும், பள்ளி வளாகத்தில் தேங்கி நிற்கும் மழை நீரால் மாணவர்கள் சுதந்திரமாக விளையாட முடியாத நிலை உள்ளது. பள்ளியின் இடைவெளி நேரத்தில் வகுப்பறையிலேயே மாணவர்கள் முடங்க வேண்டியுள்ளது. இதனால் இப்பள்ளி மாணவர்களின் விளையாட்டுத் திறன் அடியோடு முடங்கிவிட்டது.
இந்தப் பள்ளியில் போதிய வகுப்பறைகள் இல்லை. தற்போது 8 வகுப்பறைகள் மட்டுமே உள்ளன. வகுப்பறை பற்றாகுறையால், ஒரு வகுப்பறையை இரண்டாகப் பிரித்து இரு வகுப்பு மாணவர்களை ஒன்றாக அமர வைத்து இட நெருக்கடியில் பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டிய நிலை உள்ளதாக ஆசிரியர்கள் வருத்தப்படுகின்றனர்.
இதேபோல், பள்ளியில் ஆழ்துளைக் கிணறு அமைத்து குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. தற்போது குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதால் மாணவர்கள் இங்கு கிடைக்கும் குடிநீரை பருக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
வகுப்பறைக் கட்டடங்களும் விரிசல் விட்டுள்ளது. மழைக் காலத்தில் விரிசல் வழியே தண்ணீர் உள்ளே புகுவதால் வகுப்பறையில் மாணவர்களை அமர்த்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது: பள்ளியின் அடிப்படை வசதிகள் குறித்து பலமுறை மனுக்கள் கொடுத்தும் அதிகாரிகள் கண்டு கொள்வதே இல்லை. தற்போது அதிகாரிகளின் அலட்சியப் போக்கால், இந்த பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.
தமிழகத்தின் தலைநகரான சென்னையின் வெகு அருகில் இந்தப் பள்ளி அமைந்திருந்தும் இந்தப் பள்ளியின் நிலைமையை மாற்ற யாரும் குரல் கொடுக்க முன் வரவில்லை. ஏழை மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இனியேனும் இந்தப் பள்ளியை சீரமைக்கும் நடவடிக்கைகளை கல்வித் துறை அதிகாரிகள் விரைந்து எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் எதிர்பார்க்கின்றனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.