Pages

Thursday, December 18, 2014

எட்டாக்கனியாகும் தொடக்கக் கல்வி! இருளர் இன குழந்தைகளின் அவலம்

உத்தரமேரூர் வட்டத்தில் உள்ள இருளர் இன மக்கள் வசிக்கும் கிராமங்களில் தொடக்கப் பள்ளிகள் இல்லாததால் 3 கி.மீ. தொலைவில் உள்ள பள்ளிக்கு அனுப்ப அந்தச் சமுதாய மக்கள் தயக்கம் காட்டுகின்றனர். இதனால், பள்ளி செல்லாக் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலை உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

உத்தரமேரூர் வட்டம், தளவராம்பூண்டி பஞ்சாயத்துக்கு உள்பட்ட பட்டாங்குளம், வினோபா நகர் கிராமங்களில் 800-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். வினோபா நகரில் மட்டும் 400-க்கும் மேற்பட்ட இருளர் இன மக்கள் வசிக்கின்றனர்.
இந்த கிராமங்களில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை செல்லும் குழந்தைகள் 40 பேர் உள்ளனர். இதில் பெரும்பாலானோர் இருளர் இனத்தைச் சேர்ந்த குழந்தைகள்.
இங்கு தொடக்கப் பள்ளி இல்லாததால் 3 கி.மீ. தொலைவில் உள்ள மல்லியங்கரணை அரசு உதவி பெறும் பள்ளி அல்லது வாடாநல்லூர் அரசுப் பள்ளிக்குச் சென்று படிக்க வேண்டிய நிலை உள்ளது.
மல்லியங்கரணை பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் பள்ளிக்குச் செல்ல வேண்டுமானால் உத்தரமேரூர்- சென்னை நெடுஞ்சாலையைக் கடந்து செல்ல வேண்டும்.
இவ்வாறு சாலையைக் கடக்கும் போது விபத்துகள் ஏற்படும் அபாயத்துடன் பள்ளி செல்கின்றனர்.
வாடாநல்லூரில் உள்ள அரசுப் பள்ளிக்கு பேருந்தில் பயணம் செய்து கல்விப் பயிலும் நிலை உள்ளது.
மேலும் இங்குள்ள பழங்குடியின மக்கள், வெகுதூரம் சென்று பயில்வதற்கு தங்களது குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பத் தயக்கம் காட்டுகின்றனர். இதனால் பள்ளி செல்லாக் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாகும் சூழல் உள்ளது.
குழந்தைகளின் அடிப்படைக் கல்வியான 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான படிப்புக்குக் கூட எட்டாக்கனியாகும் நிலை உள்ளது.
மேலும் இருளர் சமுதாய மக்கள் வாழ்வாதாரம் உயர, அரசு பல்வேறு சலுகைகள் அளித்த போதிலும் அரசு அதிகாரிகள் இங்கு புதிய பள்ளியை நிறுவ தயங்குவது ஏன் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
1-ஆம் வகுப்பு முதல் 5 வரை 25 மாணவ, மாணவிகள் இருந்தால் அவர்களுக்கு 1 கி.மீ.க்குள் ஒரு பள்ளி அமைக்க வேண்டும் என தமிழக அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் இந்தப் பகுதியில் 3 கி.மீ. தொலைவில் 40-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் சென்று கல்விப் பயில்வதை அரசு அதிகாரிகள் இன்னமும் செவிமெடுக்கவில்லை.
இதுகுறித்து அரசு அதிகாரிகளிடமும், ஆட்சியாளர்களிடமும் பலமுறை மனு அளித்தும் பயனில்லை என்கின்றனர் இப்பகுதி இருளர் சமூகத்தினர்.
எனவே மாவட்ட ஆட்சியர் இந்த விஷயத்தில் சிறப்பு கவனம் செலுத்தி புதிய தொடக்கப் பள்ளியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.