Pages

Thursday, December 18, 2014

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆர்வம் ஏற்படுத்தப்படுமா?

உயர் கல்வியில் விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டிற்கு வழங்கப்படும் மதிப்பெண் குறித்து, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு, மாநில அளவிலான பாரதியார் தின குழு விளையாட்டுப் போட்டிகள் மற்றும் மாநில அளவிலான குடியரசு தின விளையாட்டுப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன.
பிரிவு ஏ(பழைய விளையாட்டுகள்), பிரிவு பி(புது விளையாட்டுகள்), பிரிவு சி(தடகளம்), பிரிவு டி(சதுரங்கம்) என 4 பிரிவுகளாக, குறுவட்டம், கல்வி மாவட்டம், மண்டலம் என 3 நிலைகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.
கல்வி மாவட்டம் மற்றும் மண்டல அளவில், உதவி பெறும் பள்ளி மற்றும் மெட்ரிக். பள்ளி மாணவர்கள் மட்டுமே அதிகமாக பங்கேற்றனர். அரசுப் பள்ளி மாணவர்கள், குறுவட்ட அளவிலேயே வெளியேறி விடுகின்றனர்.
பள்ளிக் கல்வித்துறை மூலம் நடத்தப்படும், இதுபோன்ற மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு மதிப்பெண் வழங்கப்படுகிறது. இந்த மதிப்பெண், விளையாட்டு ஒதுக்கீட்டிற்கு உதவியாக இருக்கும் என்பது குறித்து மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதன் மூலம், அரசுப் பள்ளி மாணவர்களிடையே விளையாட்டுத்துறையில் ஆர்வம் ஏற்படுத்த வேண்டும் என்பதே விளையாட்டு ஆர்வலர்கள் கோரிக்கையாக உள்ளது.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியது: ஒருசில அரசுப் பள்ளிகளைத் தவிர்த்து, பெரும்பாலான பள்ளிகளுக்கு விளையாட்டு மைதான வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. புதிய விளையாட்டுகளுக்கான உபகரணங்கள் இல்லாவிட்டாலும், கபடி, கோ கோ, தடகளம் உள்ளிட்ட பிரிவுகளில், மாணவர்களின் திறனை மேம்படுத்த வேண்டியது உடற்கல்வி ஆசிரியர்களின் பொறுப்பு. மாணவர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்துவதற்கு, அவர்கள் தொடர் முயற்சி மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான்,இதற்கு முற்றுப்புள்ளி வைத்தால் மட்டுமே, அரசுப் பள்ளி மாணவர்களின் விளையாட்டு திறன் மேம்படும் என்றார் அவர்.
விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீடு விவரம்: ஒவ்வொரு ஆண்டும் விளையாட்டு வீரர்களுக்காக, பொறியியல் கல்லூரிகளில் 500 இடங்களும், மருத்துவக்கல்லூரியில் 3 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள், விளையாட்டுப் போட்டிகளில் பெறும் வெற்றிக்கு ஏற்றவாறு மதிப்பெண் வழங்கப்படுகிறது.
51 வகையான விளையாட்டு போட்டிகளுக்கு மதிப்பெண் வழங்கப்படுகிறது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.